Wednesday, October 22, 2008

2011-ல் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கருத்தரங்கில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும். இதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கிரீமிலேயர் விவகாரத்தில் தெளிவான நிலை ஏற்படும் என்றும் அரசியல் கட்சிகள் கூறியுள்ளன.

கருத்தரங்கில் பங்கேற்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு பேசியது:

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பிற சமூக சேவை அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதுகுறித்து அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை பின்பற்றுவதன் மூலமே சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் வறுமை நிலை ஆகியவை குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மக்கள் தொகை குறித்து அறிவியல் அடிப்படையில் புள்ளிவிவரத்தை திரட்டாதவரை கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான இடஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டுவருதல் என்பது சாத்தியமில்லை என்று முன்னதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததை நினைவுகூர்ந்தார் இராமதாசு.
சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதற்காக பாமக சார்பில் நாடுமுழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

சாதி அடிப்படையில் கணக்கெடுப்பை பின்பற்ற மத்திய அரசு தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்துதலோ, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தைக் குறித்து கொள்ள ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூடுதலாக ஒரு காலத்தை சேர்த்தால் மட்டும் போதுமானது என்றார் அவர்.

சமூக ஊடகங்களும் கண்களை மூடிக்கொண்டு செயல்படுகின்றன. உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்காமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றன. எனவே, ஊடகத்துறையிலும் இடஒதுக்கீடு என்பது அவசியம் என்றும் இராமதாசு வலியுறுத்தினார்.

இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், கரண் சிங், இராம் கோபால் யாதவ், தேவேந்திர பிரசாத் யாதவ், சரத் யாதவ், தேவேந்தர் கெளட உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, October 13, 2008

மதுவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும்: இராமதாசு

மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தின் 23-வது மது ஒழிப்பு மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

ஆண்களால் சாதிக்க முடியாததை பெண்களால் சாதிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த மாநாடு. பெண்கள் சக்திமிக்கவர்கள். தாயாகவும், மனைவியாகவும் இருந்து ஆண்களுக்கு சக்தியை அளிப்பவர்கள்.

"ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே' என்று சொல்வார்கள். ஆனால், குடியினால் அழிவது ஆண்கள்தான். குடி அரக்கனிடமிருந்து ஆண்களை பெண்களால் மட்டுமே காக்க முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

குடிகார ஆண்களால் குடும்பம் சீரழிவதைத் தடுத்து நிறுத்த இந்த மகளிர் மது ஒழிப்பு மாநாடு இங்கு நடத்தப்படுகிறது.

மதுரையில் நீண்ட காலத்துக்கு முன்பு கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்ற சம்பவம் உண்டு. எனினும், தற்போதுதான் முதல்முறையாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மகளிர் சங்கம் மூலம் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்தக் கேடுகெட்ட மதுவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். இது எங்கள் கோரிக்கை மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள 3 கோடி பெண்களின் விருப்பமாகும். ஆண்களும் கூட மதுக்கடையை வெறுக்கத்தான் செய்கின்றனர்.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளதற்கு குடிதான் காரணம். 13 வயதிலேயே குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பள்ளி மாணவர்கள் பார்களில் குடித்துவிட்டு பிடிபடும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

தமிழக தெருக்களில் இரவில் 10 மணிக்கு மேல் குடிகாரர்களின் ராஜ்ஜியமாக உள்ளது. பெண்கள் கண்ணீர்தான் மது பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கண்ணீர்க் கவலை கோட்டையில் உள்ளவர்களுக்குக் கேட்க வேண்டும்.

கடின உழைப்பு மூலம் கிடைக்கும் ரூ.100 கூலியை டாஸ்மாக்கில் குடித்து அழித்து விடுகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ரூ.1-க்கு கிலோ அரிசி, ரூ.50-க்கு மளிகைச் சாமான்கள், இலவச டி.வி. என அரசு வழங்கி வருவது மிகவும் கொடுமையாகும்.

தமிழ்நாடு பெயரை ஒட்டி அடைப்புக்குறிக்குள் குடிகாரநாடு என்று இட வேண்டிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்குக் கேடு என்று பாட்டிலில் அச்சிட்டுவிட்டு அரசே குடிக்கச் சொல்வது எவ்விதத்தில் நியாயம்?

1971-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி 4 தலைமுறை வீணாகிவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்ற விவரம் தற்போது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதை அறிந்து பெண்கள் பதறுகின்றனர் என்றார்.

நன்றி: தினமணி