இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கருத்தரங்கில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும். இதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கிரீமிலேயர் விவகாரத்தில் தெளிவான நிலை ஏற்படும் என்றும் அரசியல் கட்சிகள் கூறியுள்ளன.
கருத்தரங்கில் பங்கேற்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு பேசியது:
சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பிற சமூக சேவை அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதுகுறித்து அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை பின்பற்றுவதன் மூலமே சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் வறுமை நிலை ஆகியவை குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.
சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மக்கள் தொகை குறித்து அறிவியல் அடிப்படையில் புள்ளிவிவரத்தை திரட்டாதவரை கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான இடஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டுவருதல் என்பது சாத்தியமில்லை என்று முன்னதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததை நினைவுகூர்ந்தார் இராமதாசு.
சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதற்காக பாமக சார்பில் நாடுமுழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
சாதி அடிப்படையில் கணக்கெடுப்பை பின்பற்ற மத்திய அரசு தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்துதலோ, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தைக் குறித்து கொள்ள ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூடுதலாக ஒரு காலத்தை சேர்த்தால் மட்டும் போதுமானது என்றார் அவர்.
சமூக ஊடகங்களும் கண்களை மூடிக்கொண்டு செயல்படுகின்றன. உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்காமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றன. எனவே, ஊடகத்துறையிலும் இடஒதுக்கீடு என்பது அவசியம் என்றும் இராமதாசு வலியுறுத்தினார்.
இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், கரண் சிங், இராம் கோபால் யாதவ், தேவேந்திர பிரசாத் யாதவ், சரத் யாதவ், தேவேந்தர் கெளட உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment