இலங்கை அரசு போரை நிறுத்தவில்லையெனில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்போம் என இந்தியா அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு வலியுறுத்தினார்.
இதுகுறித்து வேலூரில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
போரை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இராசபக்சே இந்தியாவுக்கே வந்து மறுத்துள்ளார். இங்கிருந்து சென்றதும் தாக்குதலை அதிகரித்துள்ளார்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்போம் என்று இந்தியா அறிவிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சென்று, ஐ.நா தலையீட்டைக் கோரவேண்டும். இல்லையெனில் பிரச்னை தீராது. பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண இலங்கையை எச்சரிக்க வேண்டும்.
இந்தியா முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களை தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. 52 லட்சம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இது என்ற கருத்துக்கு இந்தியா வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. எங்கேயும் முப்படைத் தாக்குதல் நடைபெறவில்லை.
நம்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் இறந்துள்ளனர். இதை இந்தியா சகித்துக் கொள்வதுபோல் வேறு எந்த நாடும் சகித்துக் கொள்ளாது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும். முக்கியமான காலக் கட்டத்தில், சிக்கலான பிரச்னையில் இந்திய அரசின் தலையீடு அவசியம் என்ற நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும். ஏற்கெனவே அரசு கூட்டியதால்தான் மத்திய அரசு கொஞ்சம் செயல்படத் தொடங்கியது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டி மாற்று வழியை சிந்திக்க வேண்டும். சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில் இந்த கூட்டம் கூட்டினால் சரியாக இருக்கும்.
இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை இலங்கைக்கு அதிகபட்ச ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது. இது இந்தியாவுக்கு எதிரான நிலைபாடு. இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு ஏற்பட்டால் இந்தியாவுக்கு நேசநாடாகத்தான் இருக்கும் என்றார் இராமதாசு.
நன்றி தினமணி
No comments:
Post a Comment