Tuesday, December 30, 2008

பெரும் சுமையில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து வீசி எறிவது போல

"சட்டத்தால் ஒழியுமா சாராயம்?' என்ற தலைப்பில் வெளியான (தினமணி 13-2-08) எனது கட்டுரை எண்ணிறந்த எதிர்வினைகளை எதிர்கொண்ட ஒன்று. அண்மையில் மதுவிலக்கை தமிழ்நாட்டில் எதிர்வரும் தைத் திங்கள் முதல் நாள் தொடங்கி அமல்படுத்த வேண்டும் என்று சமயங்கள் பலவற்றைச் சார்ந்த பெரியவர்கள் பலரும், டாக்டர் ராமதாஸ் முன்முயற்சியில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிய பெரும் சுமையில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து வீசி எறிவது போல, தமிழக அரசு மதுபான விற்பனைக் கடைகளின் இயங்கும் நேரத்தை ஒரு மணி குறைத்து அறிவித்துள்ளது.

மதுவிலக்கு என்பது ஒரு மாநிலத்தில் மட்டுமே செயல்படுத்தக்கூடியது அல்ல; இதற்கான கொள்கை தேசிய அளவில் உருவாக்கப்பெற்று செயல்வடிவம் தரப்பட வேண்டும் என்பது தமிழக அரசுத்தரப்பில் முன்வைக்கப்படுகிற வாதமாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்தியும், மீண்டும் செயல்படுத்தியும், மறுபடியும் விலக்கிக் கொண்டும் முடிவுகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் பிரபலமாக முன்நிறுத்தப்பட்ட ஒருவாதம் "சுற்றிலும் எரியும் நெருப்பு வளையத்திற்குள் கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்க இயலாது' என்பதுதான். இதை முற்றிலுமாகப் புறந்தள்ள முடியாது.

சட்டப்படி மதுவிலக்கு பூரணமாக நீடித்து அமலாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படும் குஜராத் மாநிலத்தில் எத்தகைய கேலிக்கூத்தான நிலைமை நிலவுகிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டங்களில் புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும், சத்தியவேடுக்கும் படையெடுத்த "போதை சுற்றுலா'ப் பயணிகளின் எண்ணிக்கையே மலைப்பைத் தருவதாக இருந்ததுண்டு.

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்கே மடைதிறந்து பாய்ந்த மதுவெள்ளம், ஒசூரில் விஷச்சாராயச் சாவுகளுக்குக் காரணமாக அமைந்தது என்பதும் அண்மைக்கால நிகழ்வு.

சென்னையில் ஐ.ஐ.டி. தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் மதுபான இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் இதை அனுமதிக்கலாகாது என்று எதிர்க்குரல் எழும்பியது. இந்த எதிர்ப்புக்கு "மதிப்பு' அளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதில் கலந்துகொண்ட கல்வியாளர்களை நந்தம்பாக்கத்தில் அமையப் பெற்றுள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்துக்கு சொகுசுப் பேருந்துகளில் அழைத்துச் சென்று விருந்து உபசாரத்தைக் குறையொன்றும் இல்லாமல் நடத்தி முடித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களில் பலர் வெளிநாட்டவர் என்பதால் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடக்கவிருந்த இந்த விருந்தை எதிர்த்துக் குரல்கள் எழுந்ததையே, தமிழ்நாட்டின் விருந்தோம்பல் பண்பாட்டிற்கு முரணான ஒன்றாக ஆங்கில நாளேடு ஒன்று சித்திரித்தது என்பதும் நினைவில் நிறுத்தற்பாலது.

இன்றைய உலகமய, தாராளமயச் சூழலில் நாட்டைச் சீரழித்து வரும் நுகர்வுக் கலாசாரத்தின் தாக்குதலின் ஒரு பரிமாணம்தான் நாட்டில் பெருகி வரும் குடிப்பழக்கம். சிகரெட், பீடியை கூட சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளின் வாயிலில் நிற்கும் சிறுவர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் மது விற்பனை செய்யப்படும் காட்சி வேதனையளிக்கிற ஒன்று. மதுபானக் கடைகளையொட்டி அமையப்பெற்றுள்ள மதுக்கூட "பார்கள்' திறந்தவெளிக் குடியை ஊக்குவிப்பனவாகச் செயல்படுகின்றன.

நட்சத்திர உணவு விடுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பெற்ற பார்களில் மது அருந்துவது கூடுதல் செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமே அவற்றில் சுவையும், சுகமும் அனுபவிக்க இயலும். ஆனால் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபாட்டில்களுக்கான விலையோடு, ஒரு ரூபாய்க்கு வாங்க முடிகின்ற ஊறுகாயை வைத்தே குடித்து முடிக்கிற போதையர்களாகப் பலரும், பழகி அனுபவிக்க முடிகிறது.

குடிப்பழக்கத்தை முகச்சுளிப்பில்லாமல் ஏற்று அனுமதிக்கிற குடும்பங்களின் எண்ணிக்கை, அதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவானதே. எனவே மது பாட்டிலை வாங்கிச் சென்று வீட்டில் குடிப்பதற்கு அஞ்சுகின்ற அல்லது தயக்கம் காட்ட நேரிடுகின்ற ஒரு பெரும் பகுதி குடிகாரர்களுக்கு இந்த பார்கள்தான் அபயக்குரல் கொடுத்து அழைப்பு விடுக்கின்றன.

இவையெல்லாம் மது அரக்கனின் விஸ்வரூப தாண்டவத்தை இன்றுள்ள நிலையிலேயே தொடர்ந்து அனுமதிப்பது எத்தகைய பெரும் சமூகக்கேடு. இளைய தலைமுறையைச் சீரழிக்கும் இந்தக் கொடுமையை எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்கிற சவாலை நம் முன் நிறுத்துகின்றன.

மதுவிலக்கு தொடர்பான தேசியக் கொள்கை உருவாகி, அது படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு விடுவதற்கான வாய்ப்போ, காலமோ கனிந்து வந்துள்ளதாக நம்புவது மடமையே அன்றி வேறல்ல. எனவே மதுவைப் பூரணமாக விலக்க இயலாதெனினும், மது அரக்கனை சற்றே விலங்கிட்டு வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழக அரசு இந்தத் திசையில் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால் நல்லது.

முதலாவதாக, சேர்ந்து குடிக்கும் பெருந்திரள் மதுக்கூடங்களாகத் திகழும் திறந்தவெளி அரசு அனுமதி பெற்ற பார்களை ரத்து செய்வது பற்றி மாநில அரசு யோசிக்க வேண்டும்.

மதுபானக் கடைகளையொட்டி இத்தகைய "பார்'களை அனுமதிக்கிற முடிவு அறிவிக்கப்பட்டபோது, இன்றைய தமிழக முதலமைச்சர் முரசொலியில் எழுதிய "பார்' கவிதையை அவரே மீண்டும் ஒருமுறை படித்துப் பார்ப்பாரேயானால் இந்த பார்களுக்கான அரசு அனுமதியை நீக்குவதற்கான காரண காரியம் பளிச்செனப் புலப்படும்.

இது ஒருவேளை டாஸ்மாக் விற்பனையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தாமல்கூடப் போகலாம். ஆனால் பார்கள் தடைசெய்யப்படுவது, பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் தெரியாமல் குடிக்கிற ஒரு பகுதியினரை - குறிப்பாக இளைய தலைமுறையினரில் கணிசமானவர்களை - குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்யும்.

இரண்டாவதாக, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை கணிசமாகக் குறைக்கலாம். இந்தியாவிலேயே பல மாநிலங்களில் மது விற்பனை நேரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கே மதுபானக் கடைகள் திறந்து வைக்கப்படுவது, இரவு குடித்து முடித்த போதை தெளிந்த உடனேயே மீண்டும் போதை ஏற்றிக்கொள்ள வகை செய்கிற ஏற்பாடாகவே அமைந்துவிடுகிறது. ஊரறியக் குடிப்பவர்கள் மாலை மயங்கி இரவு நெருங்குகிறபோது மதுபானக் கடையை நோக்கி நடையைக் கட்டுவார்கள்.

ஆனால் ஒளிவு மறைவாகக் குடிப்பவர்கள்தான் கடைகளில் கூட்டம் அதிகம் இல்லாத - யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் குறைவாக எழும் - காலை நேரத்தில் இந்தக் கடைகளை வட்டமிடுகிறார்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்கிற சர்வதேசக் கோட்பாடு டாஸ்மாக் விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் 10 மணி நேரம் என்றிருக்க வேண்டியதில்லையே!

மூன்றாவதாக, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை இனிக் கூட்டுவதில்லை என்கிற முடிவைத் தொடர்ந்து, தற்போது இயங்கும் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் அரசு யோசிக்க வேண்டும். ஊர்நடுவே, பள்ளிக்கூடம் அல்லது வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் நேரடி நடவடிக்கைகளில் இறங்குகிறபோது மட்டுமே அரசு நிர்வாகம் இதைப்பற்றிக் கவனம் செலுத்துகிறது.

மாறாக, மாவட்டந்தோறும் தற்போது உள்ள கடைகளின் எண்ணிக்கையையும், அவை அமைந்துள்ள இடங்களின் பொருத்தப்பாடு பற்றியும் மாவட்ட நிர்வாகமே முன்கையெடுத்துப் பரிசீலனை செய்து இந்தத் திசையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

நான்காவதாக, வருடம் முழுவதும் - காந்தி, மகாவீரர் பிறந்த நாள்கள் போன்ற அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து - தொடர்ந்து இயங்க வேண்டிய இடையீடற்ற நடப்பாக மதுபான விற்பனை நடப்பது அவசியம்தானா என்பதையும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

பல மாநிலங்களில் - முன்னர் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் கூட - மாதாந்திர சம்பள தினங்களான முதல் தேதி, 10-ம் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படுவதுண்டு. சில மாநிலங்களில் வாரம் ஒரு நாள் விற்பனை நிறுத்தப்பட்டதும் கடந்த கால நடைமுறை. வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்று என்ற நோக்கிலும் இதைக் கவனிக்கலாம்.

முறைசாராத் தொழிலாளர்கள் வாரக்கூலி பெறுகின்ற சனிக்கிழமைகளில் மதுக்கடைகளை மூடுவது அந்தக் குடும்பங்களின் பெண்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சைத் தரும் என்பது திடமான உண்மை. தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள்களையொட்டி மதுக்கடைகள் மூடப்படுவது தேர்தல் ஆணையம் கையாளுகிற நடவடிக்கையாக உள்ளது.

விடுமுறை விடப்பட்டாலும், குடிபோதைக்கு அடிமையானவர்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதை மறுக்க முடியாது. எனினும் வருடத்திற்கு 52 நாள்களாவது மது விற்பனை நடைபெறாமல் இருப்பது, "படிப்படியாக' என்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குமல்லவா?

ஐந்தாவதாக - அதி முக்கியமானதாக - மாநில அரசு குடிப்பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்தை ஓர் இயக்கமாகவே மேற்கொள்ள வேண்டும். இதற்கென்று கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டால், மது அரக்கனுக்கு எதிரான ஒரு கருத்துப் போரைப் பயனுள்ள விதத்தில் நடத்த இயலும். குடிபோதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுப்பதற்கான சிகிச்சை மையங்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது - தனியார் மருத்துவமனைகளால் இலவசமாக நடத்தப்படவும் அரசு ஏற்பாடு செய்யலாம்.

இந்த வரிசையில் இன்னும் பலவற்றைச் சொல்லலாம்; எனினும் தொடக்கமாக இவற்றைத் தொட்டுப் பார்க்கலாமே!

புதிய ஆண்டு பிறக்கப் போகிறது. ஏற்கெனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் நட்சத்திர விடுதிகளையும், பண்ணை வீடுகளையும் மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டு விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்தப் புத்தாண்டின் வரவை மதுபானம் தரும் உற்சாகத்தோடு கொண்டாடுவது என்பதுதான் உலகமயக் கலாசாரம். நம் சமூகத்தில் புகுத்தி உள்ள இழிவு. இந்தத் தருணத்தில் ஏற்கெனவே நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும், உயிரிழப்பும் தொடர் கதையாகாமல் பார்த்துக் கொள்வதும் அரசு நிர்வாகம் - காவல்துறையின் பொறுப்பு!

நன்றி: தினமணி 30.12.2008

Monday, December 22, 2008

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு: மருத்துவர் இராமதாசிடம் தமிழக முதல்வர் உறுதி

“தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த ஆயத்தமாகிறேன்“ என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்ததாக பாமக நிறுவனர் இராமதாசு குறிப்பிட்டுள்ளார்.

இராமதாசு தலைமையில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்து சமுதாயத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்தின் முடிவில் தை மாதம் முதல் தேதியில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வற்புறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இராமதாசு தலைமையில் அனைத்து சமுதாய மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை சந்தித்துப் பேசினர்.

சந்திப்புக்கு பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் இராமதாசு கூறியது:

மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருகி வருகிறது. பள்ளி மாணவர்களும் குடிக்கும் நிலை உள்ளது. மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயம் பெருகும் என்ற கருத்து உள்ளது.

கள்ளச் சாராயம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று இங்குள்ள சமுதாயத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அண்டை மாநிலத்தில் மது இருக்கிறதே என்று முதல்வர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் மதசார்பற்ற சனதா தள அரசின் ஆட்சிக் காலத்தில் மது ஒழிக்கப்பட்டது. தற்போதைய அரசும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயார் என அறிவித்துள்ளது.

பல துறைகளுக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும் நீங்கள் (கருணாநிதி), மது விலக்கை அமல்படுத்தி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுகொண்டோம். இதற்காக தேசியக் கொள்கை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம்.

எங்கள் கருத்துகளைக் கேட்ட முதல்வர், “உங்கள் உணர்வை மதிக்கிறேன். மதுவிலக்கை முழுமையாக அமல் செய்ய இயலாவிட்டாலும், படிப்படியாக அதைச் செய்ய ஆயத்தமாகிறேன்.”

என்று உறுதி அளித்துள்ளார். இதற்கு முதல்படியாக விரைவில் என்னுடன் இதுதொடர்பாக கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக குறிப்பிட்டார் இராமதாசு.

Monday, December 15, 2008

தமிழ் ஈழம்தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்: இராமதாஸ்

இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் ‘தமிழ் ஈழம் தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்‘ என்று இந்திய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் இராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ‘தமிழ் இன மான மீட்பு இயக்கம்‘ சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ஈழ தமிழர் நலனை காக்க கோரியும் உறுதிமொழி ஏற்பு முழக்க நிகழ்ச்சி சென்னையை அடுத்த மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

இது ஒரு வித்தியாசமான போராட்டம். ஈழத்தில் இன்னலுக்கு ஆளாகியுள்ள தமிழனுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்று வெளிச்சத்தை காட்ட தீப் பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்துகிறோம். எங்கள் குரலும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலும் இலங்கையில் தமிழ் ஈழம் மலரவேண்டும் என்பதுதான். இலங்கையில் தமிழனும், சிங்களனும் சேர்ந்து வாழ முடியாது. 60 ஆண்டுகாலமாக தனி நாடு கேட்டு தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று முடிவுக்கு வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இலங்கை இறையாண்மைக்கு குந்தகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என இங்குள்ள சிலர் கூறுகிறார்கள்.

சொந்த நாட்டு மக்களை குண்டு போட்டு அழிப்பதும், பள்ளிக்கூடம், கோவில்கள் மீது குண்டு வீசி தாக்குவதும்தான் இறையாண்மையா? இல்லை என்று ஐ.நா.வே சொல்கிறது. சொந்த நாட்டு மக்களை கண் போல் காப்பது தான் இறையாண்மை. இலங்கையில் வாழும் தமிழனுக்கும், சிங்களவனுக்கும் உள்ள மதம், மொழி, கலாசாரம் வேறு, வேறு. அப்படியிருக்கையில், எப்படி ஒன்றாக வாழ முடியும். அதனால்தான் தனி நாடு கேட்டு போராடி வருகிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்ச தனது வீட்டில் பாதாள அறையில் இருந்து கொண்டு, கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என்று கூறி வருகிறார். இந்திய அரசுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசே, இலங்கை என்றும் நமக்கு நட்பு நாடு அல்ல, பகை நாடு தான். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் அவர்களுக்கு நட்பு நாடு. இந்த உண்மையை ஏன் இன்னும் உணரவில்லை. இதை உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இலங்கை வழியாக நமக்கு ஆபத்து வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. சிங்களவன், நம்மளை காட்டி கொடுத்து விடுவான். எனவே, இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் தமிழ் ஈழம் தான், நமக்கு நட்பு நாடாக இருக்கும்.

1985-ம் ஆண்டு நடந்த ‘டெசோ‘ மாநாட்டில் தமிழ் ஈழமே தீர்வு என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இலங்கை தமிழர் பிரச்சினையை முதல் கையில் எடுத்தது நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ள தி.மு.க.வுக்கு உரிமை உள்ளது. அவர்கள் அப்போது முன்மொழிந்ததைத்தான், இப்போது நாங்கள் வழிமொழிந்து வருகிறோம். இலங்கை இராணுவத்துக்கு அழிவு நிச்சயம். எனவே, உடனடியாக ராஜபக்ச புத்தியை பயன்படுத்தி, தமிழர்களுக்கு நாட்டை திருப்பி கொடுக்க வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி இலங்கை இராணுவம், தமிழர்கள் வாழும் பகுதியில் ‘கிளஸ்சர்‘ வகை குண்டுகளை பயன்படுத்தி தாக்கியுள்ளது. இந்த வகை குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று 2002-ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஐ.நா. தலைமையில் கூடிய 92 நாடுகள் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இப்போது தடை செய்யப்பட்ட குண்டுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இது ஒன்றே போதும். இலங்கை இராணுவத்தை உலக நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.

இவ்வாறு டாக்டர் இராமதாஸ் பேசினார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Wednesday, December 10, 2008

மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா?: இராமதாஸ் கேள்வி

மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் "சிங்கள அரசே போரை நிறுத்து'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று புதன்கிழமை வீரசந்தனம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரச்சினை குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் பரப்புரை செய்வோம். 13 ஆம் நாள் மறைமலை நகரில் கருஞ்சட்டைப் படை மான மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கின்றனர். அதில் நானும் கலந்து கொள்கிறேன்.

இந்திய அரசு அங்கே நடக்கிற தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும். ஆனால் இந்திய அரசு நினைக்கவில்லை. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று பிரதமரிடம் பேசிய போது இதனை புரிந்து கொண்டோம். 4 ஆம் நாள் டெல்லி சென்று வலியுறுத்தினோம். 10 ஆம் நாள் ஆகிவிட்டது, இதுவரை அதற்கான ஒரு சிறு அடையாளம் கூட இல்லை.

டெல்லி சென்றோம், பேசினோம், வந்தோம். ஆனால் வென்றோமில்லை. எந்த சலனமும் இதுவரை ஏற்படவில்லை. சிறிலங்காவுக்கு வெளிவிவகார மந்திரி சென்றதாக இல்லை. இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு தலைமை தாங்குகிற முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரை நாம் கேட்பது.

சிறிலங்கா என்றுமே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்தியாவுக்கு அது பகை நாடு என்பதை இந்தியா உணரவில்லை. அல்லது ஈழத் தமிழர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் ஏன் அமெரிக்கா கூட இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற வேண்டும். தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். அது இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடாக இருக்கும் என்பதை முதலமைச்சர் கருணாநிதி சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது கூட நெருங்கி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மரணக்குழி அவர்களுக்கு காத்திருக்கிறது. மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கி விட்டால் அப்போது இந்தியா அதை அங்கீகரிக்குமா? அங்கீகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூற வேண்டும். தற்காப்புக்காக அங்கீகரிக்கலாம்.

போரை நிறுத்துவது மட்டும் தீர்வாகாது. அரசியல் தீர்வு என்பது என்ன? இன்னும் 100 ஆண்டுகளானாலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை தரமாட்டார்கள். இந்த அங்கீகாரத்தை முதல்வர் முன்னெடுத்துச் சொல்ல, நாங்கள் பின்னாலேயே உறுதிமொழி எடுத்துச் சொல்கிறோம்.

டெல்லி சென்ற போது ஐ.நா. மூலமாக பாதுகாப்பு சபைக்கு சென்று முறையிடலாம் என்றெல்லாம் கூறினோம். பிரதமருக்கு இலங்கை பிரச்சினையில் ஆலோசனை கூற கட்சி சார்பற்ற 2 தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றேன். என்ன சொல்லியும் என்ன பிரயோசனம். ஒன்றுமே நடக்கவில்லை.

இப்போது மனித சிவில் உரிமை கழக தலைவர் வக்கீல் சுரேஷ் உலக நீதிமன்றத்தில் முறையிட அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்படி 30 நாட்களில் உலக நீதிமன்றத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார் அவர்.

கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் மு.மேத்தா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொது செயலாளர் தியாகு உட்பட பலர் உரையாற்றினர்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, December 9, 2008

விவசாய நிலங்களை மனை வணிகத்திற்கு விற்காதீர்கள்: மருத்துவர் இராமதாசு

உழவர் பேரியக்கம் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இம்மாநாட்டில் மருத்துவர் இராமதாசு பேசியது:

நில மனை வணிகம் செய்பவர்கள் வந்து கேட்டால் விளை நிலங்களை விற்காதீர்கள்.

சிப்காட், சிட்கோ போன்றவற்றின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க விளைநிலங்களை அபகரிக்கின்றனர்.

விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என பேரவையில் முதல்வர் அறிவித்தார். ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காப்பாற்றவில்லை.

விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நிலங்களை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் விளைநிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே தரும் காலம் வரும்.

வாழ்கின்ற உரிமையை இழந்து விட்ட விவசாயிகளுக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது. வாழ்வதா, சாவதா என மத்திய, மாநில அரசுகளை விவசாயிகள் கேட்டு வருகின்றனர். விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகளின் புரட்சி வெடிக்கும்.

நமது நாட்டில் ஒரு மாதத்துக்கு 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறி வருகின்றனர். ஆனால் விவசாயிகள் வளைந்து வளைந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி விட்டனர்.

நகர்ப்புறத்தில் 44 சதவீதமும், கிராமப்புறத்தில் 56 சதவீதமும் விவசாயிகள் வசிக்கின்றனர். முன்னெல்லாம் விவசாயிகள் ரூ.10 முதல் போட்டு ரூ.100 சம்பாதித்தனர். ஆனால் தற்போது ரூ.100 முதல் போட்டு ரூ.10-தான் சம்பாதிக்கின்றனர்.

விவசாயிகளின் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, தனி நீர்ப்பாசன கொள்கை வகுக்க வேண்டும்.

நதிகள் இணைப்பு என்பது கனவாகவே உள்ளது. இணைப்புக்கு முன்பு நதிகளை தேசியமயமாக்க வேண்டும். மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நபார்டு வங்கி நேரடியாக விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும்.

பாலாறு உள்பட அனைத்து ஆறுகளும் பாழடைந்து விட்டன. தடுப்பணைகள் கட்ட வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இலவச கலர் டிவி வழங்க ரூ.2,300 கோடியை ஒதுக்கீடு செய்கின்றனர். அத்தொகையை விவசாயிகளின் நலனுக்காக செலவிடலாம்.

உரம், விதையை இலவசமாக தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் பால் விலை ரூ.12 என விற்கப்படுகிறது. பால் உற்பத்தி செய்வோருக்கு லிட்டருக்கு ரூ.25 தர வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாசு.

நன்றி: தினமணி, தினத்தந்தி.