“தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த ஆயத்தமாகிறேன்“ என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்ததாக பாமக நிறுவனர் இராமதாசு குறிப்பிட்டுள்ளார்.
இராமதாசு தலைமையில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்து சமுதாயத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.
கூட்டத்தின் முடிவில் தை மாதம் முதல் தேதியில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வற்புறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இராமதாசு தலைமையில் அனைத்து சமுதாய மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை சந்தித்துப் பேசினர்.
சந்திப்புக்கு பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் இராமதாசு கூறியது:
மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருகி வருகிறது. பள்ளி மாணவர்களும் குடிக்கும் நிலை உள்ளது. மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயம் பெருகும் என்ற கருத்து உள்ளது.
கள்ளச் சாராயம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று இங்குள்ள சமுதாயத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அண்டை மாநிலத்தில் மது இருக்கிறதே என்று முதல்வர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் மதசார்பற்ற சனதா தள அரசின் ஆட்சிக் காலத்தில் மது ஒழிக்கப்பட்டது. தற்போதைய அரசும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயார் என அறிவித்துள்ளது.
பல துறைகளுக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும் நீங்கள் (கருணாநிதி), மது விலக்கை அமல்படுத்தி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுகொண்டோம். இதற்காக தேசியக் கொள்கை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம்.
எங்கள் கருத்துகளைக் கேட்ட முதல்வர், “உங்கள் உணர்வை மதிக்கிறேன். மதுவிலக்கை முழுமையாக அமல் செய்ய இயலாவிட்டாலும், படிப்படியாக அதைச் செய்ய ஆயத்தமாகிறேன்.”
என்று உறுதி அளித்துள்ளார். இதற்கு முதல்படியாக விரைவில் என்னுடன் இதுதொடர்பாக கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக குறிப்பிட்டார் இராமதாசு.
Monday, December 22, 2008
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு: மருத்துவர் இராமதாசிடம் தமிழக முதல்வர் உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment