Monday, December 15, 2008

தமிழ் ஈழம்தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்: இராமதாஸ்

இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் ‘தமிழ் ஈழம் தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்‘ என்று இந்திய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் இராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ‘தமிழ் இன மான மீட்பு இயக்கம்‘ சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ஈழ தமிழர் நலனை காக்க கோரியும் உறுதிமொழி ஏற்பு முழக்க நிகழ்ச்சி சென்னையை அடுத்த மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

இது ஒரு வித்தியாசமான போராட்டம். ஈழத்தில் இன்னலுக்கு ஆளாகியுள்ள தமிழனுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்று வெளிச்சத்தை காட்ட தீப் பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்துகிறோம். எங்கள் குரலும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலும் இலங்கையில் தமிழ் ஈழம் மலரவேண்டும் என்பதுதான். இலங்கையில் தமிழனும், சிங்களனும் சேர்ந்து வாழ முடியாது. 60 ஆண்டுகாலமாக தனி நாடு கேட்டு தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று முடிவுக்கு வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இலங்கை இறையாண்மைக்கு குந்தகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என இங்குள்ள சிலர் கூறுகிறார்கள்.

சொந்த நாட்டு மக்களை குண்டு போட்டு அழிப்பதும், பள்ளிக்கூடம், கோவில்கள் மீது குண்டு வீசி தாக்குவதும்தான் இறையாண்மையா? இல்லை என்று ஐ.நா.வே சொல்கிறது. சொந்த நாட்டு மக்களை கண் போல் காப்பது தான் இறையாண்மை. இலங்கையில் வாழும் தமிழனுக்கும், சிங்களவனுக்கும் உள்ள மதம், மொழி, கலாசாரம் வேறு, வேறு. அப்படியிருக்கையில், எப்படி ஒன்றாக வாழ முடியும். அதனால்தான் தனி நாடு கேட்டு போராடி வருகிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்ச தனது வீட்டில் பாதாள அறையில் இருந்து கொண்டு, கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என்று கூறி வருகிறார். இந்திய அரசுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசே, இலங்கை என்றும் நமக்கு நட்பு நாடு அல்ல, பகை நாடு தான். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் அவர்களுக்கு நட்பு நாடு. இந்த உண்மையை ஏன் இன்னும் உணரவில்லை. இதை உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இலங்கை வழியாக நமக்கு ஆபத்து வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. சிங்களவன், நம்மளை காட்டி கொடுத்து விடுவான். எனவே, இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் தமிழ் ஈழம் தான், நமக்கு நட்பு நாடாக இருக்கும்.

1985-ம் ஆண்டு நடந்த ‘டெசோ‘ மாநாட்டில் தமிழ் ஈழமே தீர்வு என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இலங்கை தமிழர் பிரச்சினையை முதல் கையில் எடுத்தது நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ள தி.மு.க.வுக்கு உரிமை உள்ளது. அவர்கள் அப்போது முன்மொழிந்ததைத்தான், இப்போது நாங்கள் வழிமொழிந்து வருகிறோம். இலங்கை இராணுவத்துக்கு அழிவு நிச்சயம். எனவே, உடனடியாக ராஜபக்ச புத்தியை பயன்படுத்தி, தமிழர்களுக்கு நாட்டை திருப்பி கொடுக்க வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி இலங்கை இராணுவம், தமிழர்கள் வாழும் பகுதியில் ‘கிளஸ்சர்‘ வகை குண்டுகளை பயன்படுத்தி தாக்கியுள்ளது. இந்த வகை குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று 2002-ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஐ.நா. தலைமையில் கூடிய 92 நாடுகள் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இப்போது தடை செய்யப்பட்ட குண்டுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இது ஒன்றே போதும். இலங்கை இராணுவத்தை உலக நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.

இவ்வாறு டாக்டர் இராமதாஸ் பேசினார்.

நன்றி: தமிழ்வின்.காம்

No comments: