Friday, July 18, 2008

கச்சத்தீவு: உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை-மருத்துவர் இராமதாசு

கச்சத்தீவு பிரச்னையைத் தீர்க்கும் அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதைச் செய்யாமல் இப்போது உண்ணாவிரதம் என்ற நாடகத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
1974-ல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்த ஒப்பந்தம்தான் இப்போதைய கொடுமைகளுக்கு முதற்காரணம். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது.
அதன்பிறகு மூன்று முறை முதல்வராகப் பொறுப்பு வகித்த நேரங்களில், தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகளைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
மத்திய ஆட்சியில் பங்கு வகித்த முக்கிய கட்சியாக இருந்தபோதிலும் அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, இப்போது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாக உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
உண்ணாவிரதம் இருப்பது தவறல்ல. ஆனால், மீனவர் பிரச்னைக்கு தில்லியில்தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, தமிழகத்தில் அல்ல.
தில்லிக்குச் சென்று தங்கி இருந்து வாதாட வேண்டும். கடலில் இந்திய மீனவரின் உயிருக்கு இலங்கை கடற்படையால் ஊறு நேர்ந்தால் இந்திய அரசு வேடிக்கை பார்க்காது என்று எச்சரிக்குமாறு வற்புறுத்த வேண்டும்.
இந்த உத்தரவாதம் கிடைக்கும் வரை சென்னை திரும்ப மாட்டேன் என்று அங்கேயே இருந்து சாதித்துக் காட்ட வேண்டும்.
இதற்கு மாறாக இங்கே உண்ணாவிரதம் என நாடகமாடுவது மீனவர்களை ஏமாற்ற மேற்கொள்ளும் முயற்சி.
ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, சுதந்திர நாளில் கோட்டையில் கொடி ஏற்றி வீர முழக்கம் செய்தது, பிரதமர்களுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதியது ஆகியவற்றைத் தவிர உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள், வேண்டாதவர்கள் என கருதப்படும் அதிகாரிகளையும் பழி வாங்குவதில் காட்டும் வேகத்தில் நூறில் ஒரு பங்கு வேகத்தையாவது, கோபத்தையாவது கச்சத்தீவுப் பிரச்னையில் காட்டி செயல்பட்டிருந்தால் இப்பிரச்னைக்கு எப்போதோ தீர்வு ஏற் பட்டிருக்கும் என இராமதாசு கூறியுள்ளார்.
நன்றி: தினமணி

No comments: