Friday, July 25, 2008

பாமகவைப் பழிவாங்க ஆள்தூக்கிச் சட்டங்களை ஏவி விடுகின்றனர்-மருத்துவர் இராமதாசு

தைலாபுரத்தில் மருத்துவர் இராமதாசு அவர்கள் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த திட்டமும் செயல்படுத்தாததே இதற்குக் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


2006-ம் ஆண்டில் மின்உற்பத்தி மாநிலத்தின் தேவையைவிட அதிகமாக இருந்தது.

2004-ம் ஆண்டில் மின் உற்பத்தி 8690 மெகாவாட். மின்சாரத்தின் பயன்பாடு 5909 மெகாவாட் மட்டுமே.
மின் பயன்பாடு 2005-ல் 6500 மெகாவாட்டாகவும், 2006-ல் 7124 மெகாவாட்டாகவும், 2007-ல் 8600 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. 2008-ல் 9121 மெகாவாட் தேவைப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டரை ஆண்டில் பெருகி வரும் மின்தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை பெருக்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.


இரண்டரை ஆண்டில் புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் வந்தன. புதிய தொழில்களின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப மின் உற்பத்தியை பெருக்கவில்லை.


மதுவிலக்குக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது. மது விற்பனையை பெருக்குவதில் காட்டும் ஆர்வத்தை விட்டுவிட்டு மின்உற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.

மின்தடையைக் கண்டித்து ஜூலை 28 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் பாமக சார்பில் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வீட்டு மனைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் முடிச்சூரில் 45 வீட்டு மனைகளை விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்புக்குப் பின் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் டாடா நிறுவனத்துக்கு 25 ஏக்கர் நிலத்தையும், டி.எல்.எப். நிறுவனத்துக்கு 25 ஏக்கர் நிலத்தையும் அரசு தாரை வார்த்துள்ளது.
இந்த நிலங்கள் விற்கப்படவில்லை. 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
99 ஆண்டுகளுக்கு குத்தகை விடுவது என்பது விற்பதற்கு சமம்.

மணல் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை தடுத்து நிறுத்த பாமக தொடர்ந்து போராடி வந்தது. இதனால் பாமகவைப் பழிவாங்க ஆள்தூக்கிச் சட்டங்களை ஏவி விடுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் போராட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு அக் கட்சிகளே பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று 1992-ம் ஆண்டு அப்போது அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதில் விஷமிகள் பிரச்னை செய்தால் அரசியல் கட்சிகள் மீது பழி விழும் என்று திமுக அதை எதிர்த்தது. அவர்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்த்தோம்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக ஒரு மசோதாவும் தாக்கல் செய்தது. ஆனால் தற்போது போராட்டம் நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சுவது முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இதுவே பொதுமக்கள் விருப்பமும், பாமகவின் விருப்பமும்.

கம்யூனிஸ்ட்டுகள் 3-வது அணியுடன் கைகோர்த்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் குறித்த திட்டவட்டமான அறிவிப்பை திமுக இதுவரை வெளியிடவில்லை. இது திமுக 3-வது அணிக்கான கதவை திறந்து வைத்துள்ளதையே காட்டுகிறது.

சோம்நாத் சாட்டர்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்கட்சி விவகாரம். நாடாளுமன்றத்தில் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி சிலர் வாக்களித்திருந்தால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு கட்டுபாடு முக்கியம்.

ஒரு கட்சியின் எம்.பி.யோ, எம்எல்ஏவோ மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவில்லை எனில் அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் இரு பங்கு ஆதரவு இருந்தால் அவர்களைத் திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தமிழக முதல்வர் கருணாநிதியை எம்.கே. என்று பலர் அழைப்பர். அவர் ஆட்சியில் எம்.ஓ.யூ. ஒப்பந்தம் கையெழுத்திடுவதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது. அவரை இனிமேல் எம்.ஓ.யூ. கருணாநிதி என்றே அழைக்கலாம் என்றார் ராமதாஸ்.

No comments: