Tuesday, July 29, 2008

தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-பா.ம.க. நிறுவுனர் இராமதாசு

இலங்கைக் கடற்படை தாக்குதலில்இருந்து தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு குற்றம்சாட்டினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தப் பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். மிக விரைவாகவும் அவசரமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இது என்றும் அவர் கூறினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதுவரை நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களால் பயனில்லாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பணவீக்கம் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த 14 அம்ச திட்டத்தை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்றும்போது பிடிவாதம் கூடாது என்றும் அவர் கூறினார். இதற்கு அவர் நேரடியாக விளக்கம் அளிக்காவிட்டாலும் சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க.வின் நிலையைத்தான் அவர் இவ்வாறு மறைமுகமாக குறை கூறியதாகத் தெரிகிறது.

விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் சாமானிய மக்கள் பயனடையும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றார் அவர்.

விவசாயிகளின் பரிதாப நிலை குறித்தும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பிரதமர் மன்மோகனிடம் இராமதாசு எடுத்துரைத்தார்.

நிதியமைச்சர் சிதம்பரம், வேளாண் அமைச்சர் சரத் பவார் ஆகிய இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமதாசு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க, சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை செல்லும் பிரதமர், மீனவர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அந் நாட்டு தலைவர்களிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றார் அவர்.

மீனவர் பிரச்னை குறித்து பிரதமரிடம் முறையிட்டபோது, மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்கலாம் என்று பிரதமர் யோசனை கூறியதாக இராமதாசு தெரிவித்தார்.

தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - அதிமுக இல்லாத புதிய அணி உருவாக்கப்பட வேண்டும். அந்த அணி காங்கிரஸ் தலைமையில் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் எஸ். ராமதாஸ் கூறினார்.
அப்படிப்பட்ட அணி உருவானால் அதற்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
திமுக - அதிமுக இல்லாத அணி காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் முனைப்பாக உள்ளது. அதில் பாமகவும் இடம் பெறும் என்றார் அவர்.

இரு கட்சிகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பாமகவுடனான உறவை திமுக அண்மையில் துண்டித்துக் கொண்டது.

No comments: