Monday, September 29, 2008

அரசு மதுக்கடையை அரசு மருந்துக்கடையாக மாற்றிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய வணிக வளாகத்தில் புதுச்சேரி அரசு நிறுவனம் (PAPSCO) கடந்த ஏழு ஆண்டுகளாக மதுக்கடையை நடத்தி வந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரியாங்குப்பத்தின் மையப்பகுதியில் இந்தக் கடை இயங்கி வந்ததாலும் மலிவு விலையில் அனைத்து மதுவகைகளும் கிடைத்தாலும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து குடிகாரர்களும் இந்தக்கடைக்கு குவிந்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்தது.

காதி துணிக்கடைக்கு அருகிலேயே இந்த மதுக்கடையை அரசு நடத்தியது வெட்கக்கேடு! இதனால் இந்த துணிக்கடைக்கு யாரும் வருவதில்லை. மேலும் அருகில் உள்ள பிற வணிக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மதுக்கடைகளை தொடங்கிய நாளிலிருந்து பொதுமக்கள் இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரிடம் பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் பலமுறை முறையிட்டனர். கள்ளுக்கடை, சாராயக்கடை, பிராந்தி கடை என அனைத்து மதுக்கடைகளையும் அவர் நடத்தி வந்ததால் மக்களின் கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை

இந்நிலையில் 2006 சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் அவர்களிடம் பொதுக்களும் வியாபாரிகளும் முறையிட்டனர். கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆறு மாதத்திற்குள் மதுக்கடையை கடையை மூடிவிடுகிறேன் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அரசு மதுக்கடையை மூடிய சட்டமன்ற உறுப்பினர் அதே இடத்தில் அதே அரசு நிறுவனத்தின் மூலம் மலிவுவிலை மருத்துக்கடையை திறந்துள்ளார்.

மதுக்கடையை மூடிய சட்டமன்ற உறுப்பினரை பாராட்டியதோடு மருந்துக்கடை திறந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது புதியதாக திறந்துள்ள மருந்துக்கடையில் பொதுமக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் 5 விழுக்காடு கழிவு உண்டு. மேலும் ரூ.500-க்கு மேல் மருந்து வாங்கும் நோயாளிகளுக்கு ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து மருந்து வழங்குகின்றனர். பிறருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கூனிக்குருகிய அரசு ஊழியர்கள் தற்போது தன்மானத்தோடு நோயாளிகளுக்கு மருந்து வழங்குகின்றனர்.

இந்நிகழ்வை தமிழ்நாடு அரசு சற்று சிந்தித்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

Friday, September 19, 2008

சாதனைகள் அல்ல; வேதனைகள்-மருத்துவர் இராமதாசு

கருணாநிதி, தனது ஆட்சியில் சாதித்துள்ளதாக போடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள பட்டியல்கள் சாதனைகள் அல்ல; வேதனைகள் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறினார்

மேலும், ரூ. 1 அரிசித் திட்டம், ரூ. 50 மளிகை திட்டம் ஆகியவை மோசடித் திட்டங்கள் என்றும் அவர் கூறினார்

தமிழக அரசின் சாதனைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், தோல்வி அடைந்த திட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் போட்டு தமிழக அரசின் சாதனைகள் என்று பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

குடிசை மாற்று வாரியம் ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சென்னையைக் கூட குடிசை இல்லாத நகரமாக மாற்ற முடியவில்லை.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அளித்த நிதி ரூ.54 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக புதுதில்லியில் இருந்த வந்த அதிகாரி தெரிவிக்கிறார். ஆனால் கருணாநிதி ரூ.42 கோடிதான் செலவு செய்யப்படவில்லை என்கிறார்.

உடல் ஊனமுற்றோருக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு 11 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் வெளியிட்டுள்ள பட்டியல்கள் சாதனை அல்ல வேதனை.

விலை உயர்வை கட்டுப்படுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு ரூ.1 விலையில் அரிசி வழங்குவது, ரூ.50-க்கு மளிகை பொருள்கள் வழங்குவது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்கள். ரூ.50-க்கு வழங்கப்படும் மளிகை பொருள்களின் அளவை பார்த்தால் இது புரியும்.

1.84கோடி குடும்ப அட்டைகள் ரூ.1 அரிசி திட்டத்தில் பயன்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.24 கோடியை தாண்டுகிறது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.24 கோடிதான். மீதமுள்ள 2.25 கோடி பேர் குடும்ப அட்டைகளில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8000 டாஸ்மார்க் கடைகளை மூடிவிட்டு அனைத்தையும் நியாயவிலைக் கடைகளாக மாற்ற வேண்டும். ஏற்கெனவே உள்ள நியாயவிலைக் கடைகளில் வழக்கமாக வழங்கும் பொருள்களை வழங்க வேண்டும். இந்த புதிய நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை அரசே விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம்தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் மீது மதவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அன்பை அடிப்படையாக கொண்டது கிறித்துவ மதம். பாதிரியார்கள், சகோதரிகள் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களைப் போல் சேவை செய்ய வேண்டும் என்று போட்டி போடாமல், அவர்கள் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி யார் எந்த மதத்தை பின்பற்றவும், மதப் பிரசாரம் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்களின் மத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதையும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதையும் நாகரிக சமுதாயம் ஏற்காது என்றார்.

Wednesday, September 17, 2008

செப்டம்பர் 17-வீரவணக்க நாள்


தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயரிழந்தவர்களுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

1987-ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு 21 பேர் பலியானார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, நடுவண் அரசு சுகாதாரத்துறை அமைச்சர் இரா.அன்புமணி, தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் இரா.வேலு, மாநில வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி செ.குரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் கோ.தன்ராசு, அ.கி.மூர்த்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வன்னியர் சங்க அலுவலகத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

இடஒதுக்கீட்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சித்தனி, பாப்பனப்பட்டு, பனையபுரம் ஆகிய பகுதிகளில் மாவீரர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Monday, September 1, 2008

அரசின் அறிவிப்புகள் மகிழ்ச்சி தரவில்லை: மருத்துவர் இராமதாசு

சென்னை, ஆக. 31: தொழில் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் 15 ஸ்டாண்டர்டு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாங்குவதற்கு ஏற்ற வகையில் நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்துவதற்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அறிவிக்கப்பட்ட போதெல்லாம், நில வணிகம் என்ற நோக்கம் தான் பிரதானமாக உள்ளது என்று எடுத்துக்கூறினோம்.

தொழில் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவையெல்லாம் இனிமேல் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்ச வரம்பிற்கும் அதிகமான அளவில் நிலத்தை வாங்குவதற்கும், வைத்துக்கொள்வதற்கும் அரசிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்; அதற்காக நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்தப் போவதாக தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்க முற்பட்டிருக்கிறார்கள்.

இந்த அநீதி அனுமதிக்கப்பட்டால், நில வணிகம் இன்னும் கொடிகட்டிப் பறக்கும். தொழில் நிறுவனம், கல்வி நிறுவனம், வணிக நிறுவனம் என்ற பெயரால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கி வளைத்துப் போட்டுக்கொள்ள முடியும். இதற்கு ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும்.

வசதியுள்ளவர்களும், கறுப்புப் பணக்காரர்களும் இருக்கின்ற காலி நிலங்களையும், விளை நிலங்களையும் இனி வளைத்துப் போட்டுக் கொள்வார்கள். இதனால், வீடற்றுத் தவிக்கும் உள்ளூர் மக்களுக்கு இனி சொந்த வீடு என்பது வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாகவே முடிந்துவிடும்.

வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்: அண்ணாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க.வின் இத்தனை ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும், தமிழகத்தில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் கிலோ அரிசியை ரூ. 2-க்கு வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதை அறியும் போது இந்த அறிவிப்பால் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும்?

அரிசி விலையைக் குறைப்பதை விட மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அதற்கு எல்லோருக்கும் வேலை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். உழைத்துச் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடும்பத்திற்கே செலவழிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.

அண்ணாவின் இந்தக் கனவை நிறைவேற்ற முன்வராமல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தால் வறுமையை போக்கிவிட முடியாது என்று கூறியுள்ளார் இராமதாசு.
நன்றி: தினமணி