Monday, September 1, 2008

அரசின் அறிவிப்புகள் மகிழ்ச்சி தரவில்லை: மருத்துவர் இராமதாசு

சென்னை, ஆக. 31: தொழில் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் 15 ஸ்டாண்டர்டு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாங்குவதற்கு ஏற்ற வகையில் நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்துவதற்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அறிவிக்கப்பட்ட போதெல்லாம், நில வணிகம் என்ற நோக்கம் தான் பிரதானமாக உள்ளது என்று எடுத்துக்கூறினோம்.

தொழில் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவையெல்லாம் இனிமேல் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்ச வரம்பிற்கும் அதிகமான அளவில் நிலத்தை வாங்குவதற்கும், வைத்துக்கொள்வதற்கும் அரசிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்; அதற்காக நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்தப் போவதாக தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்க முற்பட்டிருக்கிறார்கள்.

இந்த அநீதி அனுமதிக்கப்பட்டால், நில வணிகம் இன்னும் கொடிகட்டிப் பறக்கும். தொழில் நிறுவனம், கல்வி நிறுவனம், வணிக நிறுவனம் என்ற பெயரால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கி வளைத்துப் போட்டுக்கொள்ள முடியும். இதற்கு ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும்.

வசதியுள்ளவர்களும், கறுப்புப் பணக்காரர்களும் இருக்கின்ற காலி நிலங்களையும், விளை நிலங்களையும் இனி வளைத்துப் போட்டுக் கொள்வார்கள். இதனால், வீடற்றுத் தவிக்கும் உள்ளூர் மக்களுக்கு இனி சொந்த வீடு என்பது வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாகவே முடிந்துவிடும்.

வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்: அண்ணாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க.வின் இத்தனை ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும், தமிழகத்தில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் கிலோ அரிசியை ரூ. 2-க்கு வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதை அறியும் போது இந்த அறிவிப்பால் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும்?

அரிசி விலையைக் குறைப்பதை விட மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அதற்கு எல்லோருக்கும் வேலை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். உழைத்துச் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடும்பத்திற்கே செலவழிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.

அண்ணாவின் இந்தக் கனவை நிறைவேற்ற முன்வராமல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தால் வறுமையை போக்கிவிட முடியாது என்று கூறியுள்ளார் இராமதாசு.
நன்றி: தினமணி

No comments: