Tuesday, February 10, 2009

17ம் திகதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை மனித சங்கிலி போராட்டம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

ஈழத்தமிழர்களை பாதுகாக்கக் கோரி எதிர்வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என இன்று சென்னையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஈழத்தமிழர்களை காக்கக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை மனிதசங்கிலி நடத்துவது.

2. மதுரையில் 24ஆம் தேதியும், கோவை, திருச்சி, பாண்டி, சேலம், தூத்துக்குடியில் 19ஆம் தேதி மக்கள் திரள் பேரணி நடத்துவது.

3. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பது.

4. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இமெயில் அனுப்புவது.

5. ஈழத்தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் மரண சாசனத்தை பல இலட்சம் பிரதிகள் எடுத்தும், சி.டி.யில் பதிவு செய்தும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்வது

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் பேசிய இயக்கத் தலைவர்கள், தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

நன்றி: தமிழ்வின்.காம் (10.02.2009)

No comments: