Tuesday, March 31, 2009

இயக்குனர் சீமானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: பாமக நிறுவுனர் இராமதாசு

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்’’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் சீமான் கடந்த பெப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி கோரினார். இதற்கு சிறைத்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சீமானுடன் பேச்சு நடத்தினார். உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீமான் தனது போராட்டத்தைக் நேற்று கைவிட்டு மதியம் உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில் 31.03.2009 செவ்வாய் மாலை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராமதாசு, ‘’பழிவாங்கும் நடவடிக்கையினாலே இயக்குனர் சீமான் சிறையில் வாடுகிறார்.

இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் போராட்டம் நடத்தினார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்’’ என்று தெரிவித்தார்.

‘’தன்னை பகைக்கிறவர்களை உள்ளே தள்ளுவது கலைஞர் வழக்கம்.

இதனால்தான் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் தேர்தல் நேரம் பார்த்து எதற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பிச் சென்றார்.

நன்றி தமிழ்வின.காம்

Monday, March 30, 2009

இலங்கைத் தமிழர் பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

சென்னை, மார்ச் 30: இலங்கைப் பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக பாமக மீது முதல்வர் கருணாநிதி வீண் பழி சுமத்துவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்; அதுதான் மரபு. ஆனால் அன்றைய தினத்தில் (அக்.17) தில்லியில் இருந்த திமுக எம்.பி.க்களை டி.ஆர்.பாலு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வருகிறார். திமுக தலைவரைச் சந்தித்து அவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சித் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தால் அதன் விளைவு என்ன என்பது யாருக்கும் தெரியாததல்ல.

திமுக எம்.பி.க்கள் முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் அன்றைய தினத்தில் அளித்திருந்தால், பாமக எம்.பி.க்களும் அதற்கு அடுத்த நொடியே தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்திருப்பார்கள். ஆனால், முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் கொடுக்காமல், அதனை கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டது வெறும் நாடகம். அப்படிக் கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டதால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்று சொல்லிக் கொண்டு, இப்போது பாமக மீது வீண் பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுவது சரியானதல்ல.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் பக்கத்தில் உள்ள நாடு (இந்தியா) குறுக்கிட்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்? என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு ""வங்கதேசம் எப்படி வந்தது?'' என்று சூடாகப் பதிலளித்திருக்கிறார் கருணாநிதி.

ஆனால், இன்றைக்கு இந்தியா ஓர் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. எனவே, அந்த நாட்டுப் பிரச்னையில் இந்தியா ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்கிறார்.

இப்படி குழப்பத்தில் உள்ள கருணாநிதி, தேர்தல் வந்ததும் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, பாமக மீதும் மற்ற கட்சிகள் மீதும் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

Monday, March 23, 2009

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி: ராமதாஸ்

சென்னை, மார்ச் 23: "இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார்'' கருணாநிதி என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.

அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.

வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், "இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது'' என்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.

இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.

இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது. ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.

ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.

ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது. அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.

அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும். போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: தினமணி

Thursday, March 12, 2009

சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்: ப.ம.க. தலைவர் கோ.க.மணி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இலங்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் தனியரசு தொடக்க உரையாற்றினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அ.தமிழரசு வரவேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி சிறப்புரை ஆற்றி பேசியதாவது:-

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இது தடுக்கப்படவேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அன்று அன்னிய செலாவணி ஈட்டி கொடுத்தவர்கள் இன்று இலங்கையில் கொல்லப்படுகின்றனர். பாதுகாப்பு வளையம் என்று தமிழர்களை அழைத்து கொலை செய்கின்றனர். இதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் மத்திய அரசு மவுனமாக இருக்கக்கூடாது.

அங்கு போர் நிறுத்தம் ஏற்பட உடனே வழிவகை செய்ய வேண்டும். பட்டினி சாவை தடுக்க சர்வதேச சமுதாயம் உடனே தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, March 10, 2009

தமிழக தமிழர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது

தமிழக தமிழர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது

இலங்கையில் ஆயுத மோதலுக்கு தீர்வு காணாமல் போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க போகிறோம் என்று படையை அனுப்பி வைத்தால் தோல்விதான் ஏற்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை போர் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.

இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்ச அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வன்னிப்பகுதியில் உள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர் மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரைநூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும். தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்திரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.

பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இன படுகொலை நடத்தும் ராஜபக்ச அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிக பெரிய மோசமான தவறாகும்.

ராஜபக்ச அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை. தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும். இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

போர் பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.

அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆயுத மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.

இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர் பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

நன்றி: தமிழ்வின.காம்

Monday, March 2, 2009

வன்னியில் 1987ல் செய்ததுபோல வானூர்தி மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்: ராமதாஸ்

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று வானூர்தி மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தில்தான் அவர்கள் வசிக்கிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, கொடூரத் தாக்குதல் மூலம் தமிழர்களை வெளியேற்றத்துடிக்கும் இலங்கை அரசின் வலையில் இந்தியா சிக்கி விடக் கூடாது.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வந்தால், அவர்களை சொந்த பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று வானூர்தி மூலம் உணவு மற்றும் மருத்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்.

உலக நாடுகளைப் போல இந்தியாவும், இலங்கை அரசுடனான பொருளாதார உதவிகள் மற்றும் கடன் உதவித்திட்டங்களை கைவிட வேண்டும். இலங்கையுடனான விளையாட்டு உறவுகளை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டால் மட்டுமே தமிழ் மக்களின் துயர் துடைத்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்