Tuesday, March 31, 2009

இயக்குனர் சீமானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: பாமக நிறுவுனர் இராமதாசு

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்’’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் சீமான் கடந்த பெப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி கோரினார். இதற்கு சிறைத்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சீமானுடன் பேச்சு நடத்தினார். உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீமான் தனது போராட்டத்தைக் நேற்று கைவிட்டு மதியம் உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில் 31.03.2009 செவ்வாய் மாலை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராமதாசு, ‘’பழிவாங்கும் நடவடிக்கையினாலே இயக்குனர் சீமான் சிறையில் வாடுகிறார்.

இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் போராட்டம் நடத்தினார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்’’ என்று தெரிவித்தார்.

‘’தன்னை பகைக்கிறவர்களை உள்ளே தள்ளுவது கலைஞர் வழக்கம்.

இதனால்தான் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் தேர்தல் நேரம் பார்த்து எதற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பிச் சென்றார்.

நன்றி தமிழ்வின.காம்

No comments: