Monday, March 30, 2009

இலங்கைத் தமிழர் பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

சென்னை, மார்ச் 30: இலங்கைப் பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக பாமக மீது முதல்வர் கருணாநிதி வீண் பழி சுமத்துவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்; அதுதான் மரபு. ஆனால் அன்றைய தினத்தில் (அக்.17) தில்லியில் இருந்த திமுக எம்.பி.க்களை டி.ஆர்.பாலு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வருகிறார். திமுக தலைவரைச் சந்தித்து அவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சித் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தால் அதன் விளைவு என்ன என்பது யாருக்கும் தெரியாததல்ல.

திமுக எம்.பி.க்கள் முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் அன்றைய தினத்தில் அளித்திருந்தால், பாமக எம்.பி.க்களும் அதற்கு அடுத்த நொடியே தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்திருப்பார்கள். ஆனால், முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் கொடுக்காமல், அதனை கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டது வெறும் நாடகம். அப்படிக் கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டதால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்று சொல்லிக் கொண்டு, இப்போது பாமக மீது வீண் பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுவது சரியானதல்ல.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் பக்கத்தில் உள்ள நாடு (இந்தியா) குறுக்கிட்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்? என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு ""வங்கதேசம் எப்படி வந்தது?'' என்று சூடாகப் பதிலளித்திருக்கிறார் கருணாநிதி.

ஆனால், இன்றைக்கு இந்தியா ஓர் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. எனவே, அந்த நாட்டுப் பிரச்னையில் இந்தியா ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்கிறார்.

இப்படி குழப்பத்தில் உள்ள கருணாநிதி, தேர்தல் வந்ததும் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, பாமக மீதும் மற்ற கட்சிகள் மீதும் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

No comments: