கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி தகவல் தருவோருக்கு தமிழக அரசு வெகுமதி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறினார்.
திருவண்ணாமலையில் பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மருத்துவர் இராமதாசு பேசியது:
பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, மதுக்கடைகள் திறக்க மாட்டேன் என்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மக்களுக்கு நலத் திட்டங்களை தீட்ட மாட்டேன் என்றும் கூறினார்.
தற்போது, மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் கலர் டிவி, காஸ் அடுப்பு, இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கி வருகிறார்.
அண்ணா காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என கூறும் கருணாநிதி, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மறுக்கிறார். ஈரோட்டில் கள் இறக்கக் கூடாது என்ற கொள்கைக்காக தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை பெரியார் வெட்டிச் சாய்த்தார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒரு சொட்டு கூட இல்லாமல் ஒழிக்க என்னிடம் திட்டம் உள்ளது. அதை தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்க தயாரா?
கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்துவோர் பற்றிய விவரங்கள் குறித்து தகவல் அளிப்போரின் பெயர்களை இரகசியமாக அரசு வைத்திருக்கிறது. மேலும், அவர்களுக்கு தக்க சன்மானமும் அரசு அளிக்கிறது.
அதேபோல், கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி தகவல் தருவோரின் விவரங்களை அரசு இரகசியமாக வைப்பதுடன், அவர்களுக்கு வெகுமதியும் தர வேண்டும் என்றார் இராமதாசு.