தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங்கை தாமதமாக நடத்தி, செட்டிநாடு மருத்துவக் கல்லூரியின் 97 இடங்கள் பறிபோனது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
""மருத்துவப் படிப்புக்கான மாணவர் கவுன்சலிங்கில் எந்தவிதத் காலதாமதமும் இல்லை; கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கால அட்டவணையின்படிதான் இந்த ஆண்டு கவுன்சலிங் நடைபெறுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
""மருத்துவப் படிப்புக்கான மாணவர் கவுன்சலிங்கில் எந்தவிதத் காலதாமதமும் இல்லை; கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கால அட்டவணையின்படிதான் இந்த ஆண்டு கவுன்சலிங் நடைபெறுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒரு அரசின் வலிமை, மக்களின் அறியாமையில் அடங்கியிருக்கிறது என்பதை என்றைக்கோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் தி.மு.க. அரசு நம்பிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காண்பிக்கிறது.
கடந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கிலேயே (ஜூலை 9, 2007 முதல் ஜூலை 16, 2007 வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெற்றது.) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன; கடந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அட்டவணையிலும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு கவுன்சலிங் அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 4, 2008 முதல் ஜூலை 8, 2008 வரை முதல் கட்ட கவுன்சலிங் நடந்தது; இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் ஆகஸ்ட் 11 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்று சுய நிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படவில்லை.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் உடனடியாகத் தொடங்கப்படாமல், 34 நாள்கள் இடைவெளி விட்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கால தாமதத்தை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ""நிகர்நிலைப் பல்கலைக்கழகம்'' என்ற தகுதியைப் பெற்றுவிட்டது.
இதனால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு இடம்கூட கிடைக்காமல் போய்விட்டது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வரை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி சென்று, அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் அளிக்கத் தேவையில்லை என தடையாணை பெற்ற வரலாறு இருக்கிறது.
அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கின்போதே, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பியிருந்தால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிடமிருந்தும் 97 இடங்கள் கிடைத்திருக்கும். இட ஒதுக்கீட்டுச் சலுகையின்படி சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குக் கிடைத்திருக்க வேண்டிய 70 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் பறிபோயிருக்காது.
எனவே ""இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்து அறிவித்த கால அவகாசத்துக்குள் கவுன்சலிங் நடத்தப்படுகிறது; எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங் நடத்துவதில் கால தாமதம் எதுவும் இல்லை'' என்று பிரச்னையை திசை திருப்பாமல், இதற்குப் பொறுப்பானவர்கள் யார் எனக் கண்டறிய முழுமையான விசாரணையை நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும்' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி: தினமணி, 14.08.2008
No comments:
Post a Comment