பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் பாமக நிறுவனரும், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனருமான ச. இராமதாசு.
திருச்சியில் இப் பேரியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரும்பு பயிரிடுவோர் கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
"விவசாய சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் வேளாண்மையில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் நாம் நடத்தும் போராட்டத்துக்கு அவர்களே தங்களது சொந்தச் செலவில் வருவர். எனவே, விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் விவசாய சங்கங்கள் ஈடுபட வேண்டும்.
எந்த அரசையும், எந்த ஆட்சியாளரையும் குறை சொல்லவில்லை. ஆனால், குறை சொல்லும் நிலையில் மத்திய அரசு உள்பட எல்லா அரசுகளும், ஆட்சியாளர்களும் உள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளை நன்கு தெரிந்த, புரிந்த அதிகாரிகள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளான உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்டவை பற்றி ஒவ்வொரு அரசும் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், அவ்வாறு அறிந்து கொள்வதில்லை.
நாம் பலமாக இல்லாததே இதற்குக் காரணம். நாம் பலமாக இருந்தால், அரசும் பயப்படும்.
சொட்டு நீர்ப்பாசனத்துக்கு 50 சத மானியம் வழங்கப்படும் என்பதே ஒரு ஏமாற்று வேலைதான். கருவிகளின் விலையை உயர்த்தி, அது விவசாயிகள் மீதுதான் சுமத்தப்படுகிறது. இதன்மூலம், அரசியல்வாதிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தைப்போல, சென்னையில் மிகப் பெரிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும். 2 நாள் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு முன்பு, சென்னை தீவுத் திடலில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பின்னர், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் கலக்காமல், உழவர்களை ஒன்று திரட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தால் மட்டும் போதாது; ஓரிரு ஆண்டுகளுக்கு உரம், விதை போன்றவற்றையும் இலவசமாக வழங்க வேண்டும்.
வேளாண் துறை அமைச்சரும், அதிகாரிகளும் மாதந்தோறும் விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் எந்த நாடும் முன்னேற்றம் அடைய முடியாது. எல்லா காலத்திலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்' என்றார் இராமதாசு.
பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரியக்கப் பொதுச் செயலர் செ. நல்லசாமி வரவேற்றார். தலைவர் இல. சடகோபன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment