மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு என திருச்சிராப்பள்ளி மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் 17.08.2008 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூட்டத்தில் பேசியதாவது,
"மதுவை ஒழிப்பது தொடர்பாக இங்கு நிறைவேற்றப்பட்ட ஒட்டுமொத்தத் தீர்மானம் தமிழக அரசுக்கு எட்ட வேண்டும். அவ்வாறு எட்ட வேண்டுமானால், வீட்டில், தெருவில், ஊரில், குழாயடியில் இதுபற்றி பெண்கள் பேச வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழிக்கும் இந்த மதுவை ஒழிக்க முடியும்.
மதுவை ஒழிக்க கடந்த 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தினாலும், வெற்றி கிட்டவில்லை. அதனால்தான், மகளிரைத் திரட்டி, இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
குடிப் பழக்கம் என்பது ஒரு கொடிய நோய். சமுதாயத்தைப் பாதிக்கும், வீட்டைக் கெடுக்கும் இந்த நோயை ஒழிக்க வேண்டும்.
மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து, செலவு செய்தாலும், ஒரு புதிய கொடிய நோயையும் உற்பத்தி செய்கிறது. அதனால், மரணம் ஏற்படுகிறது.
அதனால்தான், அரசு நடத்தும் மது வியாபாரத்தை மரண வியாபாரம் என்கிறோம். எனவே, மக்கள் நலன் காக்கும் இந்த அரசு, மது வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டும்.
திருப்பத்தூர் அருகேயுள்ள மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள 500 குடும்பங்களில் 180 குடும்பங்களில் பெண்கள் விதவைகளாக உள்ளனர். "குடி'யால் கணவர்கள் உயிரிழந்ததே இதற்குக் காரணம்.
மது வியாபாரத்தில் அரசு இலக்கு வைத்து விற்பனை செய்கிறது. ஊற்றிக் கொடுக்கும் வேலைக்கு பட்டதாரிகளை நியமித்துள்ளது கொடுமையானது.
வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, மின் உற்பத்தி, குடிநீர் போன்றவற்றுக்குத்தான் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆனால், இந்த அரசு "குடி'க்கு இலக்கு வைத்து, விற்பனை செய்கிறது.
மதுவை ஒழிக்க வேண்டும் என உலக சுகாதாரப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தவிர, பெரியார், ராஜாஜி, அண்ணா, ஓமந்தூரார் உள்பட பலர் மது ஒழிப்புக்குப் பாடுபட்டனர். ஆனால், யார் சொல்லியும் நான்கைந்து தலைமுறைகளாகக் கேட்கவில்லை.
குடிப் பழக்கத்திலிருந்து இளைஞர்களைக் காக்க இந்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? கடும் சட்டம் கொண்டு வந்து மதுக் கடை இல்லா சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். இதற்கான ஆலோசனையும், ஒத்துழைப்பும் நாங்கள் அளிக்கிறோம். தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர். எனவே மதுக் கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது.
இளைய சமுதாயத்தினர் மதுவால் சீரழிந்து வருவதாக இங்கு பேசிய மகளிர் குறிப்பிட்டனர். இந்தக் குரலுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, மதுக் கடைகளை மூடினால் மட்டுமே கருணாநிதியை வரலாறு மன்னிக்கும் என்றார் இராமதாசு.
நன்றி தினமணி
No comments:
Post a Comment