Friday, August 8, 2008

கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்களில் தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கிறோம்

தமிழக முதல்வர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருப்பது அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது. இத் தீர்ப்பு தமிழகத்துக்கு அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இது குறித்து தைலாபுரத்தில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

"நீங்கள் எப்படி பட்டவர்? உங்கள் நடவடிக்கை வெறுத்து ஒதுக்கத்தக்கது' என்று முதல்வர் கருணாநிதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக் கண்டனம் தமிழகத்துக்கு, ஏற்பட்ட மிகப்பெரிய தலைக்குனிவு. உச்சநீதிமன்றத்தின் கட்டளையை ஏற்று சரியாக பதில் மனு தாக்கல் செய்யாதது, அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது.
இதில் இரு வழக்கறிஞர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ஒருநபர் கமிஷன் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜூலை 14-ம் தேதி அறிக்கை கொடுக்கப்பட்டு ஜூலை 17-ம் தேதி சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் காட்டிய வேகத்தை, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டாமல் அரசு நிர்வாகம் கோட்டைவிட்டு விட்டது.

தூத்துக்குடியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு ஒரு கோடிக்கு செலவு செய்து மதுரை மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கும் விழா எடுத்துள்ளனர். இந்த ஆடம்பரத்தை முதல்வரும் அங்கீகரித்துள்ளார்.

சினிமாவில் ஆர்வம்
தமிழக முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகளில் சினிமாவை கண்டு களிப்பது, சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, அது தொடர்பான விழாவில் பங்கேற்பது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக கூறிக் கொண்டு 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப கொள்கையின் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் வேலைக்கு பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சம்தான். இதுபோல் வேலைகிடைத்தால் இரண்டரை ஆண்டுகளில் வேலையில்லாதோர் யாரும் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மைசூர், பெங்களூரில் சர்வே
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் சர்வே செய்து ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார். மைசூர், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளையும் சேர்த்து மீண்டும் சர்வே செய்யலாம். அங்கெல்லாம் 60 முதல் 70 விழுக்காடுவரை தமிழர்கள் வசிக்கின்றனர். கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்களில் தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கிறோம். இதற்கு கருணாநிதி செய்யும் சமரச அரசியலே காரணம்.

ஒகேனக்கல் திட்டத்துக்கு ஜப்பானின் நிதியுதவியை எதிர்பார்க்காமல் ஒப்பந்தம் போடப்பட்டவுடன் நிறைவேற்றியிருந்தால் இப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. மது விற்பனையில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. அதில் தருமபுரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இங்குள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க ஜப்பான் நிதி உதவியைத்தான் எதிர்பார்க்க வேண்டுமா? என்றார் ராமதாஸ்.
நன்றி: தினமணி, 08.08.2008

No comments: