Thursday, January 29, 2009

பிரணாப் -ராஜபக்ஷ சந்திப்பு ஒரு நாடகம்: ராமதாஸ்

சென்னை, ஜன. 28: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அதிபர் சந்திப்பு ஒரு நாடகம் என பாமக தலைவர் ராமதாஸ் வர்ணித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க முயலும் சிங்கள அரசுக்குத் துணை போய்க் கொண்டிருப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

""இலங்கையில் தமிழினம் அழிகிறது; அங்கே உடனடியாக போர் நிறுத்தம் செய்து, புத்தர் உலவிய புனித பூமியில் அமைதி நிலவ ஆவன செய்ய வேண்டும்'' என மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காவிட்டால் அடுத்தது என்ன என்பது குறித்து முதலில் தி.மு.க. தீர்மானிக்கும்; பிறகு அனைத்துக் கட்சிகளுடனோ அல்லது தோழமைக் கட்சிகளுடனோ கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்தப் பின்னணியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குச் சென்று வந்துள்ளார். புறப்படுவதற்கு முன்பு அவர் முதல்வருடன் தொலைபேசியில் பேசினார் என்றும் முதல்வர் கூறியதைத் தொடர்ந்துதான் தாம் கொழும்பு செல்ல இருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறியதாக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஏமாற்றம்: ஆனால், தங்களுடைய அழைப்பின் பேரில்தான் அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இத்தனை குழப்பங்களுடன் அரங்கேறியிருக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழர்களைப் பொருத்தவரை பெரும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறி வருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இதன் மூலம் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசவே இல்லை என்பது தெளிவாகிறது. தமிழர்களைப் பாதுகாப்பதாக மட்டும் இலங்கை அதிபர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு வர அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருக்கத் தேவை இல்லை.

"இன்றே போர் நிறுத்தம்; நாளை பேச்சு; அடுத்து அமைதியான வாழ்வு; இதற்கு நடவடிக்கை எடுங்கள்' என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப் பேரவைக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அவமானம் இது.

தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோரை இலங்கைக்கு வருமாறு இலங்கை அதிபர் விடுத்த அழைப்பை உரியவர்களிடம் தெரிவிப்பதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நடக்கட்டும் நாடகம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

தனி மனித வாழ்க்கையின் அத்தனை சுதந்திரங்களையும் இழந்து விட்டு தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கையில் தமிழர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இதற்காக வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் இலங்கையில் நமது தமிழ் இனமே இல்லை என்றாகிவிடும். எனவே தமிழினத்தைக் காக்க தமிழர்கள் அனைவரும் வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு சிங்கள அரசுக்கும் அதற்குத் துணை போவோருக்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

Monday, January 26, 2009

தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் இராமதாஸ் அளித்த பேட்டியின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார்.

மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15 ஆம் நாள், தி.மு.க. பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாக போகிறார்களோ? ஏன் இந்த தாமதம். கலைஞர் உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். நமது வேண்டுகோள் வேறு விதமாக இருக்க வேண்டும்.

மத்திய அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

இது தி.மு.க.விற்கு புதிதல்ல. தனி ஈழம் தான் இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு என்று ஏற்கனவே தி.மு.க. அறிவித்து பல மாநாடுகள், பேரணிகள், நடத்தி இருக்கிறது. அந்த பழைய நிலைப்பாட்டையே தி.மு.க. மீண்டும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கிற தீர்வு கிடைக்கும்.

இத்தகைய முடிவை தான் தி.மு.க. பொதுக்குழுவிலும் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையில் அந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்ட தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

ஏனெனில் இலங்கை அரசியல் சட்டத்தில் மாநிலங்களை கொண்ட கூட்டாட்சி என்பது இடம் பெறவில்லை. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்களவர்கள் ஒருவர் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

தமிழர்களுக்கு சிறிதளவாவது அதிகாரம் வழங்கலாம் என்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்ட போதெல்லாம் அடுத்து வந்த ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது.

எனவே ஒன்றுப்பட்ட இலங்கையில் அந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது.

இப்படி கூறுகின்ற அமைப்புகளோடு நேருக்குநேர் விவாதிக்க தயார். இதர கட்சிகளும் இதனை உணர வேண்டும். இலங்கை ஒரு வித்தியாசமான நாடு அந்த நாட்டின் வரலாற்றை புரட்டி பார்த்தால் தனி ஈழம் கோரிக்கை நியாயமானது என்பது தெரியவரும்.

இந்தியாவில் வேறொரு இனத்தை சேர்ந்தவர்கள் அண்டை நாட்டில் பாதிக்கப்பட்டால் இந்தியா தலையிட்டு தனி நாடு உருவாக்கி தந்திருக்கும். உதாரணத்திற்கு கிழக்கு பாகிஸ்தான் பகுதியை வங்காள தேசம் என்ற நாடு உருவாக இந்திய தான் காரணம்.

எனவே அந்த நிலையை எடுக்க தமிழகத்தில் உள்ள கட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இதற்கு தமிழர்கள் முழு ஆதரவு தரவேண்டும் என்றார் அவர்.
நன்றி: புதினம்.காம்

Tuesday, January 20, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமை தாங்கினார்.

இலங்கையில் போரை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியதாவது:

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது. இத்தோடு இலங்கை தமிழ் இனம் முடிந்து விட்டது என சிலர் மமதையோடு பேசுகிறார்கள். இதை உணர்வுள்ள தமிழர்கள் நம்பவில்லை. தமிழர்கள் வீழ்ச்சி அடைய மாட்டார்கள்.

சிங்களவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஏழு கோடி தமிழர்களும் நினைக்கிறார்கள். இதுதான் இன உணர்வு, மொழி உணர்வு. இலங்கை தமிழர்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். அவர்கள் அந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள். இது 50 ஆண்டு கால போராட்டம்.

தமிழர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றோர் தெரிந்து வைத்திருந்தார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர அனைத்து கட்சிகள் சார்பில் பிரதமரை சந்தித்தோம். அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பிரணாப் முகர்ஜி சிறிலங்காவுக்கு செல்ல வேண்டியதில்லை. போரை நிறுத்துங்கள் என்று தொலைபேசியில் சொன்னால் போதும். சண்டை முடிவுக்கு வரவேண்டும் என்ற மனநிலை இருந்தாலே போதும்.

வன்முறை கூடாது, அறவழி போராட்டம் நடத்த வேண்டும் என்றுதான் எங்கள் கட்சியினருக்கு பாடம் நடத்துகிறோம். மறைமலை நகரில் பேசும்போது தமிழக மக்கள் 10 நாள் தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என்று தனிபட்ட முறையில் கருத்து கூறினேன்.

அதற்காக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். 5 ஆண்டு காலம் இந்த ஆதரவு கொடுப்போம்.

அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று கேட்டோம். "நான் உண்ணாநிலை இருக்கவா' என்று கருணாநிதி கேட்டார். வயது, உடல்நிலை கருதி நாங்கள் அதை ஏற்கவில்லை. திருமாவளவன் உண்ணாநிலையும் எங்கள் போராட்டமும் நாங்கள் எடுத்த முடிவு.

இந்த சூழ்நிலையில் இலங்கை பிரச்சினை திசை மாறும் வகையில் செல்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். எந்த கட்சியுடன் கூட்டணி. அந்த கட்சியுடன் சேரமாட்டேன். ஓட்டும் இல்லை. உறவும் இல்லை என்று ஒரு கட்சி மற்ற கட்சியை திட்டுவது நல்லதல்ல. உண்ணாநிலையின் போது இதை நான் அப்போதே கண்டித்து இருக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக மாணவ- மாணவிகள் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைவரும் ஒன்றுபட தயாராக இருக்க வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாஸ்.

நன்றி புதினம்.காம்

Sunday, January 18, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தமிழகத்தை செயலிழக்கும் 10 நாள் தொடர் போராட்டம்: மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே செயலிழக்கும் அளவில் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்து இராமதாஸ் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:


இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், "இன்று போய் நாளை வா'' என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும்.

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதல்மைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.

இதே மறைமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கறுப்புச் சட்டை அணிந்து 1,000 தீபங்கள் ஏற்றினோம். 7 கோடி தமிழர்களும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி, இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Monday, January 12, 2009

அரசியல் தீர்வு என்ன என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும்-மருத்துவர் இராமதாசு

சென்னை, ஜன.13-இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அரசியல் தீர்வு என்ன என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்து பேசினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்கு பின், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளியே வந்தனர். முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-போர் நிறுத்தம்

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது ராணுவம் குண்டு மழை பொழிகிறது. தமிழர்கள் அங்கே அழிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் போரை தடுக்க வேண்டிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினோம்.


ஏற்கனவே, இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி எடுத்த முயற்சிக்கு மத்திய அரசு எந்த மரியாதையும் தரவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளும் வலியுறுத்துகின்றன.

அறிக்கை வெளியிடுங்கள்
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் இதையே வலியுறுத்தியுள்ளார். 7 கோடி தமிழர்களின் முடிவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவர சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் பேசி, அது தொடர்பான அறிக்கையும் வெளியிடுங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கூறியுள்ளோம். முதல்-அமைச்சர் கருணாநிதியும் உடனே பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வு வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்துகிறது. இலங்கை அரசும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், என்ன அரசியல் தீர்வு என்பதை இலங்கை அரசு இதுவரை சொல்லவில்லை. அதை உடனே தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-
இலங்கையில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்று, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். யாரையோ எதிர்கிறோம் என்று அங்குள்ள தமிழர்களை எதிர்க்கிறார்கள். தமிழர்கள் அங்கே அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அங்கே போர் நிறுத்தம் வேண்டும். தமிழர்கள் பாதுகாப்புதான் நிரந்தரம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
இலங்கையில் வாழும் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற இந்திய அரசு தவறினால், அது காங்கிரசுக்கு வரக்கூடிய தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் எடுத்து சொன்னோம். அவரும், மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி: தினத்தந்தி

Monday, January 5, 2009

தமிழர்களையும் தமிழக சட்டமன்றத்தையும் இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது: மருத்துவர் இராமதாசு

சென்னையில் நேற்று ஊடகவியலாளர்களை மருத்துவர் இராமதாசு சந்தித்தார். இச்சந்திப்பின்போது “நாங்கள் எங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலை குனிகிறோம்.” என குறிப்பிட்டார்.

“இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும், இந்திய அரசு தலையிட்டு அமைதி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு முறை தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

38 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்தியிருக்கிறோம். மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என்று எத்தனையோ வழிகளில் போராடியிருக்கிறோம். ஆனாலும் இந்திய ஆட்சியாளர்களின் மனமிரங்கவில்லை.

தமிழர்களையும், தமிழ் மக்களையும், தமிழக சட்டமன்றத்தையும் இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது.

இலங்கை பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் பிரதமரை சென்று சந்தித்தோம். அதன் பின் பல போராட்டங்கள். ஆனால் இப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி மவுனமாகவே இருக்கிறார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். எங்கள் கட்சியை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமோ, வன்முறை இயக்கமோ அல்ல. அது விடுதலைக்காக போராடும் போராட்ட இயக்கம்.

இந்திய அரசில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் இலங்கை தமிழர்கள் அழிய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனால் அவர்கள் இலங்கை பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட தடையாக இருக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலை குறித்து அறிவிப்போம்.

என மருத்துவர் இராமதாசு மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் போரை நிறுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியை பிடித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஒரு நகரை வீழ்த்தியதை வைத்து, விடுதலை போராட்ட முடிவு நிர்ணயம் செய்யப்படுவது இல்லை.

நகரம் வீழ்ந்தாலும் தொடர்ந்து விடுதலை போராட்டம் நடக்கும் என்பதை சரித்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது. கிளிநொச்சியில் சிங்கள ராணுவம் நுழைந்தாலும் 5 லட்சம் தமிழர்களின் விடுதலை போராட்டம் தொடரத்தான் செய்யும். சிங்களர்களை போல் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்வரை போராட்டம் தொடரும்.

இந்த நிலையில் 7 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தை உள்ளடக்கிய மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை அறிவித்து செயல்பட போகிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது. போரை நிறுத்தும்படி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும், முதல்-அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்த பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என்று பிரதமரும், வெளியுறவு துறை மந்திரியும் தாக்கல் செய்த அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டபேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஆர்ப்பாட்டங்கள், முதல்-அமைச்சர் தலைமையிலான குழு சந்திப்புக்கு பின்னரும், இதுவரை மத்திய அரசு போரை நிறுத்தும்படி ஒரு வார்த்தை கூட இலங்கை அரசிடம் சொல்லவில்லை.

போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு சொல்லாது என்று இந்திய மண்ணிலேயே ராஜபக்சே சொல்லிவிட்டு சென்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள் என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார். மத்திய அரசில் உள்ள குழுவினர் கூட பிரதமரிடமும், கருணையும், மனிதாபிமானமும் நிறைந்த சோனியா அம்மையாரிடமும் இந்த பிரச்சினையை சரியாக எடுத்து சொல்ல தவறி விட்டார்கள்.

இதன் பின்னர் தமிழக மக்கள், முதல்-அமைச்சர், அரசியல் கட்சிகள் போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தும் அது நடைபெறவில்லை. இந்த அவமானத்தால் நாங்கள் தலை குனிந்து நிற்கிறோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. இனிமேல் இருக்க போவதும் இல்லை. இலங்கை நாடு பகை நாடுகளுக்கு தளமாக போகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அரசு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இலங்கையை பொறுத்தவரை இந்திய அரசின் வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் விருப்பம்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத்தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?

தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்-அமைச்சரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

Sunday, January 4, 2009

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் மத்திய அரசின் அதிகாரிகளுக்கு முக்கியமானவர்களா?'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதமூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

"இலங்கைச் சிக்கல் - இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் அமைந்த அறிக்கை ஒன்றை உங்களிடம் அளித்தேன். ஒரு மாதம் கடந்துவிட்டது. அதில் உள்ள யோசனைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.

கடலுக்கு அப்பால் தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாமல் இங்குள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அடக்குமுறையைக் கையாளும் கொழும்பு அதிகாரிகளுடன் டில்லியில் உள்ள சில அதிகாரிகள் கூட்டாகச் செயல்படுகின்றனர்.

டில்லியிடம் "சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தமிழர்களைக் குறுக்கிவிட முடியாது.

கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப்பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், தாக்கூர் அடங்கிய உயர்நிலைக் குழு கொழும்பு சென்றது.

இந்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதைச் செவிமடுக்காது, போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்று பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே இரகசிய உடன்பாடு இல்லை என்றால் இது நடந்திருக்காது.

நான் உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்.

இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்படுவதை, இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

திட்டம் தீட்டுதல், கொள்கைகளை உருவாக்குதல் பொறுப்பில் டில்லியில் இருக்கும் அதிகாரிகளுக்கு, சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கௌரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதையே இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

காலம் கடப்பதற்கு முன்பு தமிழக மக்களுக்கு நீங்கள் பதில் தெரிவிக்க வேண்டும். இவ் விஷயத்தில் நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

நன்றி: தமிழ்விண்.காம்