Monday, January 5, 2009

இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் போரை நிறுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியை பிடித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஒரு நகரை வீழ்த்தியதை வைத்து, விடுதலை போராட்ட முடிவு நிர்ணயம் செய்யப்படுவது இல்லை.

நகரம் வீழ்ந்தாலும் தொடர்ந்து விடுதலை போராட்டம் நடக்கும் என்பதை சரித்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது. கிளிநொச்சியில் சிங்கள ராணுவம் நுழைந்தாலும் 5 லட்சம் தமிழர்களின் விடுதலை போராட்டம் தொடரத்தான் செய்யும். சிங்களர்களை போல் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்வரை போராட்டம் தொடரும்.

இந்த நிலையில் 7 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தை உள்ளடக்கிய மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை அறிவித்து செயல்பட போகிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது. போரை நிறுத்தும்படி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும், முதல்-அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்த பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என்று பிரதமரும், வெளியுறவு துறை மந்திரியும் தாக்கல் செய்த அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டபேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஆர்ப்பாட்டங்கள், முதல்-அமைச்சர் தலைமையிலான குழு சந்திப்புக்கு பின்னரும், இதுவரை மத்திய அரசு போரை நிறுத்தும்படி ஒரு வார்த்தை கூட இலங்கை அரசிடம் சொல்லவில்லை.

போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு சொல்லாது என்று இந்திய மண்ணிலேயே ராஜபக்சே சொல்லிவிட்டு சென்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள் என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார். மத்திய அரசில் உள்ள குழுவினர் கூட பிரதமரிடமும், கருணையும், மனிதாபிமானமும் நிறைந்த சோனியா அம்மையாரிடமும் இந்த பிரச்சினையை சரியாக எடுத்து சொல்ல தவறி விட்டார்கள்.

இதன் பின்னர் தமிழக மக்கள், முதல்-அமைச்சர், அரசியல் கட்சிகள் போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தும் அது நடைபெறவில்லை. இந்த அவமானத்தால் நாங்கள் தலை குனிந்து நிற்கிறோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. இனிமேல் இருக்க போவதும் இல்லை. இலங்கை நாடு பகை நாடுகளுக்கு தளமாக போகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அரசு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இலங்கையை பொறுத்தவரை இந்திய அரசின் வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் விருப்பம்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத்தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?

தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்-அமைச்சரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

No comments: