ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிய பெரும் சுமையில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து வீசி எறிவது போல, தமிழக அரசு மதுபான விற்பனைக் கடைகளின் இயங்கும் நேரத்தை ஒரு மணி குறைத்து அறிவித்துள்ளது.
மதுவிலக்கு என்பது ஒரு மாநிலத்தில் மட்டுமே செயல்படுத்தக்கூடியது அல்ல; இதற்கான கொள்கை தேசிய அளவில் உருவாக்கப்பெற்று செயல்வடிவம் தரப்பட வேண்டும் என்பது தமிழக அரசுத்தரப்பில் முன்வைக்கப்படுகிற வாதமாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்தியும், மீண்டும் செயல்படுத்தியும், மறுபடியும் விலக்கிக் கொண்டும் முடிவுகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் பிரபலமாக முன்நிறுத்தப்பட்ட ஒருவாதம் "சுற்றிலும் எரியும் நெருப்பு வளையத்திற்குள் கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்க இயலாது' என்பதுதான். இதை முற்றிலுமாகப் புறந்தள்ள முடியாது.
சட்டப்படி மதுவிலக்கு பூரணமாக நீடித்து அமலாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படும் குஜராத் மாநிலத்தில் எத்தகைய கேலிக்கூத்தான நிலைமை நிலவுகிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டங்களில் புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும், சத்தியவேடுக்கும் படையெடுத்த "போதை சுற்றுலா'ப் பயணிகளின் எண்ணிக்கையே மலைப்பைத் தருவதாக இருந்ததுண்டு.
கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்கே மடைதிறந்து பாய்ந்த மதுவெள்ளம், ஒசூரில் விஷச்சாராயச் சாவுகளுக்குக் காரணமாக அமைந்தது என்பதும் அண்மைக்கால நிகழ்வு.
சென்னையில் ஐ.ஐ.டி. தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் மதுபான இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் இதை அனுமதிக்கலாகாது என்று எதிர்க்குரல் எழும்பியது. இந்த எதிர்ப்புக்கு "மதிப்பு' அளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதில் கலந்துகொண்ட கல்வியாளர்களை நந்தம்பாக்கத்தில் அமையப் பெற்றுள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்துக்கு சொகுசுப் பேருந்துகளில் அழைத்துச் சென்று விருந்து உபசாரத்தைக் குறையொன்றும் இல்லாமல் நடத்தி முடித்தனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களில் பலர் வெளிநாட்டவர் என்பதால் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடக்கவிருந்த இந்த விருந்தை எதிர்த்துக் குரல்கள் எழுந்ததையே, தமிழ்நாட்டின் விருந்தோம்பல் பண்பாட்டிற்கு முரணான ஒன்றாக ஆங்கில நாளேடு ஒன்று சித்திரித்தது என்பதும் நினைவில் நிறுத்தற்பாலது.
இன்றைய உலகமய, தாராளமயச் சூழலில் நாட்டைச் சீரழித்து வரும் நுகர்வுக் கலாசாரத்தின் தாக்குதலின் ஒரு பரிமாணம்தான் நாட்டில் பெருகி வரும் குடிப்பழக்கம். சிகரெட், பீடியை கூட சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளின் வாயிலில் நிற்கும் சிறுவர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் மது விற்பனை செய்யப்படும் காட்சி வேதனையளிக்கிற ஒன்று. மதுபானக் கடைகளையொட்டி அமையப்பெற்றுள்ள மதுக்கூட "பார்கள்' திறந்தவெளிக் குடியை ஊக்குவிப்பனவாகச் செயல்படுகின்றன.
நட்சத்திர உணவு விடுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பெற்ற பார்களில் மது அருந்துவது கூடுதல் செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமே அவற்றில் சுவையும், சுகமும் அனுபவிக்க இயலும். ஆனால் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபாட்டில்களுக்கான விலையோடு, ஒரு ரூபாய்க்கு வாங்க முடிகின்ற ஊறுகாயை வைத்தே குடித்து முடிக்கிற போதையர்களாகப் பலரும், பழகி அனுபவிக்க முடிகிறது.
குடிப்பழக்கத்தை முகச்சுளிப்பில்லாமல் ஏற்று அனுமதிக்கிற குடும்பங்களின் எண்ணிக்கை, அதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவானதே. எனவே மது பாட்டிலை வாங்கிச் சென்று வீட்டில் குடிப்பதற்கு அஞ்சுகின்ற அல்லது தயக்கம் காட்ட நேரிடுகின்ற ஒரு பெரும் பகுதி குடிகாரர்களுக்கு இந்த பார்கள்தான் அபயக்குரல் கொடுத்து அழைப்பு விடுக்கின்றன.
இவையெல்லாம் மது அரக்கனின் விஸ்வரூப தாண்டவத்தை இன்றுள்ள நிலையிலேயே தொடர்ந்து அனுமதிப்பது எத்தகைய பெரும் சமூகக்கேடு. இளைய தலைமுறையைச் சீரழிக்கும் இந்தக் கொடுமையை எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்கிற சவாலை நம் முன் நிறுத்துகின்றன.
மதுவிலக்கு தொடர்பான தேசியக் கொள்கை உருவாகி, அது படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு விடுவதற்கான வாய்ப்போ, காலமோ கனிந்து வந்துள்ளதாக நம்புவது மடமையே அன்றி வேறல்ல. எனவே மதுவைப் பூரணமாக விலக்க இயலாதெனினும், மது அரக்கனை சற்றே விலங்கிட்டு வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழக அரசு இந்தத் திசையில் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால் நல்லது.
முதலாவதாக, சேர்ந்து குடிக்கும் பெருந்திரள் மதுக்கூடங்களாகத் திகழும் திறந்தவெளி அரசு அனுமதி பெற்ற பார்களை ரத்து செய்வது பற்றி மாநில அரசு யோசிக்க வேண்டும்.
மதுபானக் கடைகளையொட்டி இத்தகைய "பார்'களை அனுமதிக்கிற முடிவு அறிவிக்கப்பட்டபோது, இன்றைய தமிழக முதலமைச்சர் முரசொலியில் எழுதிய "பார்' கவிதையை அவரே மீண்டும் ஒருமுறை படித்துப் பார்ப்பாரேயானால் இந்த பார்களுக்கான அரசு அனுமதியை நீக்குவதற்கான காரண காரியம் பளிச்செனப் புலப்படும்.
இது ஒருவேளை டாஸ்மாக் விற்பனையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தாமல்கூடப் போகலாம். ஆனால் பார்கள் தடைசெய்யப்படுவது, பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் தெரியாமல் குடிக்கிற ஒரு பகுதியினரை - குறிப்பாக இளைய தலைமுறையினரில் கணிசமானவர்களை - குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்யும்.
இரண்டாவதாக, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை கணிசமாகக் குறைக்கலாம். இந்தியாவிலேயே பல மாநிலங்களில் மது விற்பனை நேரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கே மதுபானக் கடைகள் திறந்து வைக்கப்படுவது, இரவு குடித்து முடித்த போதை தெளிந்த உடனேயே மீண்டும் போதை ஏற்றிக்கொள்ள வகை செய்கிற ஏற்பாடாகவே அமைந்துவிடுகிறது. ஊரறியக் குடிப்பவர்கள் மாலை மயங்கி இரவு நெருங்குகிறபோது மதுபானக் கடையை நோக்கி நடையைக் கட்டுவார்கள்.
ஆனால் ஒளிவு மறைவாகக் குடிப்பவர்கள்தான் கடைகளில் கூட்டம் அதிகம் இல்லாத - யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் குறைவாக எழும் - காலை நேரத்தில் இந்தக் கடைகளை வட்டமிடுகிறார்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்கிற சர்வதேசக் கோட்பாடு டாஸ்மாக் விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் 10 மணி நேரம் என்றிருக்க வேண்டியதில்லையே!
மூன்றாவதாக, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை இனிக் கூட்டுவதில்லை என்கிற முடிவைத் தொடர்ந்து, தற்போது இயங்கும் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் அரசு யோசிக்க வேண்டும். ஊர்நடுவே, பள்ளிக்கூடம் அல்லது வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் நேரடி நடவடிக்கைகளில் இறங்குகிறபோது மட்டுமே அரசு நிர்வாகம் இதைப்பற்றிக் கவனம் செலுத்துகிறது.
மாறாக, மாவட்டந்தோறும் தற்போது உள்ள கடைகளின் எண்ணிக்கையையும், அவை அமைந்துள்ள இடங்களின் பொருத்தப்பாடு பற்றியும் மாவட்ட நிர்வாகமே முன்கையெடுத்துப் பரிசீலனை செய்து இந்தத் திசையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நான்காவதாக, வருடம் முழுவதும் - காந்தி, மகாவீரர் பிறந்த நாள்கள் போன்ற அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து - தொடர்ந்து இயங்க வேண்டிய இடையீடற்ற நடப்பாக மதுபான விற்பனை நடப்பது அவசியம்தானா என்பதையும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
பல மாநிலங்களில் - முன்னர் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் கூட - மாதாந்திர சம்பள தினங்களான முதல் தேதி, 10-ம் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படுவதுண்டு. சில மாநிலங்களில் வாரம் ஒரு நாள் விற்பனை நிறுத்தப்பட்டதும் கடந்த கால நடைமுறை. வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்று என்ற நோக்கிலும் இதைக் கவனிக்கலாம்.
முறைசாராத் தொழிலாளர்கள் வாரக்கூலி பெறுகின்ற சனிக்கிழமைகளில் மதுக்கடைகளை மூடுவது அந்தக் குடும்பங்களின் பெண்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சைத் தரும் என்பது திடமான உண்மை. தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள்களையொட்டி மதுக்கடைகள் மூடப்படுவது தேர்தல் ஆணையம் கையாளுகிற நடவடிக்கையாக உள்ளது.
விடுமுறை விடப்பட்டாலும், குடிபோதைக்கு அடிமையானவர்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதை மறுக்க முடியாது. எனினும் வருடத்திற்கு 52 நாள்களாவது மது விற்பனை நடைபெறாமல் இருப்பது, "படிப்படியாக' என்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குமல்லவா?
ஐந்தாவதாக - அதி முக்கியமானதாக - மாநில அரசு குடிப்பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்தை ஓர் இயக்கமாகவே மேற்கொள்ள வேண்டும். இதற்கென்று கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டால், மது அரக்கனுக்கு எதிரான ஒரு கருத்துப் போரைப் பயனுள்ள விதத்தில் நடத்த இயலும். குடிபோதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுப்பதற்கான சிகிச்சை மையங்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது - தனியார் மருத்துவமனைகளால் இலவசமாக நடத்தப்படவும் அரசு ஏற்பாடு செய்யலாம்.
இந்த வரிசையில் இன்னும் பலவற்றைச் சொல்லலாம்; எனினும் தொடக்கமாக இவற்றைத் தொட்டுப் பார்க்கலாமே!
புதிய ஆண்டு பிறக்கப் போகிறது. ஏற்கெனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் நட்சத்திர விடுதிகளையும், பண்ணை வீடுகளையும் மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டு விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.
இந்தப் புத்தாண்டின் வரவை மதுபானம் தரும் உற்சாகத்தோடு கொண்டாடுவது என்பதுதான் உலகமயக் கலாசாரம். நம் சமூகத்தில் புகுத்தி உள்ள இழிவு. இந்தத் தருணத்தில் ஏற்கெனவே நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும், உயிரிழப்பும் தொடர் கதையாகாமல் பார்த்துக் கொள்வதும் அரசு நிர்வாகம் - காவல்துறையின் பொறுப்பு!
நன்றி: தினமணி 30.12.2008